யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி யாழ்.நகரில் ஆரம்பம்(Video, Photos)

யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றமும், எல்ஈசிஎஸ்(LECS) நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை(21.01.2022) முற்பகல்-10 மணியளவில் யாழ்.முற்றவெளியில் ஆரம்பமாகியுள்ளது.

இன்று ஆரம்பமான மேற்படி கண்காட்சி நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை(23) வரை தினமும் முற்பகல்-10 மணி முதல் இரவு-08 மணி வரை இடம்பெறும்.

கண்காட்சியின் ஆரம்ப நாள் நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத் தலைவர் நவரட்ணம் நந்தரூபன்,யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் முன்னாள் தலைவரும், இயக்குநர் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரமுடைய இயக்குநருமான கு.விக்னேஷ், எல்ஈசிஎஸ்(LECS) நிறுவனத்தின் தலைவர் அர்ச்சுன தர்மதாஸ உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி கண்காட்சியின் ஒருகட்டமாக ஈழத்து எழுத்தாளர்களின் நூல்களை உள்ளடக்கிய ‘எங்கட புத்தகங்கள்’ புத்தகத் திருவிழா கண்காட்சி இடம்பெறுவதுடன் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த இயற்கை வழி இளம் விவசாயி மகேஸ்வரநாதன் கிரிசனால் தயாரிக்கப்பட்ட ஆரோக்கிய இலைக் கஞ்சியும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேவேளை, இன்றையதினம் யாழ்ப்பாணம் சர்வதேச வர்த்தகக் கண்காட்சி ஆரம்பமாகியுள்ள போதிலும் நாளை சனிக்கிழமை முற்பகல்-10 மணியளவிலேயே வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளதாகவும், இதில் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா, யாழ்.இந்தியத் துணைத் தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளதாகவும் யாழ்ப்பாண வர்த்தகத் தொழிற்துறை மன்றத்தின் முன்னாள் தலைவரும், இயக்குநர் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரமுடைய இயக்குநருமான கு.விக்னேஷ் எமது செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.

(செய்தித் தொகுப்பு, காணொளி மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)