வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் இன்று காலை கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுள்ளது.
தங்களின் உறவுகளுக்கு நீதியை பெற்றுதா எனக் கதறிய உறவுகளால் கிளிநொச்சி கண்ணீரிலும், வலியிலும் கதிகலங்கிப்போயுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் அதன் கவனத்தை ஈர்க்கும் நொக்கில் உறவினர்களால் இந்த போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்றய தினம் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் காலை ஒன்பதுமணிக்கு உறவுகளால் மேற்கொள்ளப்பட்ட போராட்டம் அங்கிருந்து ஏ9 வீதி 155ம் கட்டையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகம் வரை சென்றடைந்து அங்கு மகஜரும் கையளிக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டத்தில் வடக்கு, கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அருட்தந்தையர்கள், ஏனைய மதங்களின் குருமார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், சிறீதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சந்திரகுமார், சுரேஸ் பிரறேமச்சந்திரன், வடக்கு மாகாண முன்னாள் உறுப்பினர்கள், பொது அமைப்புகள், யாழ். பல்கலைகழக சமூகம், தொழிற்சங்கள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் சட்டத்தரணிகள் என ஆயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.