இந்துக் குருக்கள் சபையின் தலைவர் சிவஸ்ரீ கே.வீ.கே. வைத்தீஸ்வரக் குருக்கள் வடக்கு மாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

மேற்படி சந்திப்பு இன்று திங்கட்கிழமை(04) முற்பகல் யாழ். சுண்டுக்குளியிலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பின் போது வடமாகாணத்தில் இந்துக்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
குறித்த சந்திப்பின் போது இந்துக் குருக்கள் சபையின் தலைவர் வைத்தீஸ்வரக் குருக்களினால் நந்திக் கொடி மற்றும் இந்து ஒளி சஞ்சிகை என்பன வடக்கு மாகாண ஆளுனரிடம் சம்பிரதாயபூர்வமாகக் கையளிக்கப்பட்டன.
அத்துடன் இந்துக் குருக்கள் சபையின் தலைவர் வடக்கு மாகாண ஆளுனருக்குத் தனது ஆசீர்வாதங்களையும் வழங்கி வைத்தார். இந்தச் சந்திப்பின் போது மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயப் பிரதேசத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பிலும் வடக்கு மாகாண ஆளுனர் கவனம் செலுத்தினார்.
இதேவேளை, இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுனரின் செயலாளர் எஸ். இளங்கோவனும் உடனிருந்தார்.

