Saturday, June 25, 2022
HomeEvents-நிகழ்வுகள்யாழ்.வழக்காடு மன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள்: இளைஞர்களைக் கைது செய்யுமாறு இரா.செல்வவடிவேல் உத்தரவு!! (Video)

யாழ்.வழக்காடு மன்றத்தில் கடும் வாதப் பிரதிவாதங்கள்: இளைஞர்களைக் கைது செய்யுமாறு இரா.செல்வவடிவேல் உத்தரவு!! (Video)

வடமாகாணப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் யாழ்ப்பாணப் பிரதேச செயலகமும், பிரதேச கலாசாரப் பேரவையும் அதிகார சபையும் இணைந்து நடாத்திய பண்பாட்டுப் பெருவிழா நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(25) பிற்பகல் யாழ். வைத்தீஸ்வராக் கல்லூரியில் வெகுவிமரிசையாக இடம்பெற்றது.

இந்த விழாவின் ஒரு பகுதியாக சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேலை நீதிபதியாகக் கொண்டு யாழின் முன்னணிப் பேச்சாளர்கள் பங்குபற்றிய வழக்காடு மன்றம் நடைபெற்றது.

“குற்றவாளிக் கூண்டில் இன்றைய இளைஞர்கள்” எனும் தலைப்பில் நடைபெற்ற குறித்த வழக்காடு மன்றத்தில் ஸ்ரீஸ்கந்தராசா சிவஸ்கந்தஸ்ரீ, சாள்ஸ் விஜயரட்ணம் ஜோன் கலிஸ்ரெஸ் ஆகியோர் இன்றைய இளைஞர்களை குற்றவாளிகளாக அறிவிக்க வேண்டுமெனக் கோரி வழக்குத் தொடுத்தனர். குறித்த வழக்கின் பிரதிவாதிகளாக பெரியசாமி ஸ்ரீஸ்கந்தநேசன் மற்றும் இந்திரகுமார் வினு ஆகியோர் பெயரிடப்பட்டனர்.

இந்த நிலையில் வாதிகள் தங்களுடைய வழக்கை முன்வைக்கலாமென நீதிபதி அறிவித்தார். இதனையடுத்துப் பேசிய வாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் ஸ்ரீஸ்கந்தராசா சிவஸ்கந்தஸ்ரீ இந்த நீதிமன்றத்தில் நாங்கள் இரண்டு பேரும் மிக முக்கியமாக மூன்று குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எங்கள் வழக்கை ஆரம்பிக்கின்றோம்.

கற்றறிந்த நீதிபதி அவர்களே… இளைஞர்கள் இன்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுவதற்கு மிக முக்கிய காரணம் எங்கள் இனத்தின் இதயமாகவிருக்கக் கூடிய மொழியையும், எங்களுடைய இனத்தின் மூளையாகவிருக்க வேண்டிய பண்பாட்டையும் இன்றைய இளைஞர்கள் மதிக்கவில்லை. பண்பாட்டைப் பெரும் பாழ் அடையச் செய்து விட்டார்கள். ஆகவே, இவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டுமென விநயமாக கேட்டுக் கொள்கின்றோம். இது எங்களுடைய முதலாவது குற்றச்சாட்டு.

தமிழிலக்கியத்தில் மிக முக்கியமான சட்டப் புத்தகம் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒழுக்கத்தை முன்னிறுத்துவார் திருவள்ளுவர். ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம் உயிரிலும் ஓம்பப்படுமெனக் கூறியிருக்கின்றார். ஆனால், இவர்கள் வக்காலத்து வாங்கக் கூடிய இளைஞர்கள் கலாசாரத்தை சீரழிக்கிறார்கள். இது எங்கள் இரண்டாவது குற்றச்சாட்டு.

எங்கள் கல்வியையும், பொருளாதாரத்தையும் இளைஞர்கள் கூண்டோடு அழிக்கிறார்கள். உயர் கல்விக்காகப் பல்கலைக்கழகம் சென்ற பின்னரும் அங்கு பகிடிவதை என்ற பெயரில் பண்பாட்டை அழிக்கிறார்கள். ஆகவே, இவர்களுக்குத் தக்க தண்டனை வழங்க வேண்டும். இளைஞர்களுக்காக வாதாட வந்திருக்கும் சட்டத்தரணிகளுக்கும் தக்க தண்டனை வழங்க வேண்டுமென எனது குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்து சான்றுப் பொருளையும் முன்வைக்கின்றேன் எனத் தெரிவித்தார்.

இதன்பின்னர் பேசிய நீதிபதி இரா. செல்வவடிவேல் இப்பொழுது வாதி தரப்பினர் வழக்கினை முன்வைத்துள்ளார்கள். இந்த வழக்கை நீங்கள் ஏற்று வாதாடப் போகின்றீர்களா? அல்லது நாங்கள் குற்றவாளிகள் என்று சொல்லிவிட்டுப் போகப் போகின்றீர்களா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதன்பின்னர் பேசிய பிரதிவாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் பெரியசாமி ஸ்ரீஸ்கந்தநேசன் இளைஞர்கள் மீது முன்வைக்கப்பட்டுள்ள மூன்று குற்றங்களையும் நாங்கள் முழுமையாக மறுக்கின்றோம் என மன்றுக்கு எடுத்துரைத்தார்.

பிரதிவாதிகள் தரப்பினர் குறித்த வழக்கை முற்றாக எதிர்த்துள்ள காரணத்தால் வாதிகள் தரப்பினர் முதலாவது வழக்கை விரித்துச் சொல்லுமாறு மேற்படி வழக்காடு மன்றத்தின் நீதிபதி கேட்டுக் கொண்டார். இதன்பின்னர் வாதிகள் தரப்பு வழக்கறிஞர் வழக்கின் முழு விபரத்தையும் எடுத்துக் கூறினார்.

இதனையடுத்துப் பிரதிவாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் பெரியசாமி ஸ்ரீஸ்கந்தநேசன் பேசினார். இதன்போது நீதிபதி அவர்களும் சில வேளைகளில் பக்கச் சார்பாகச் செயற்படலாமெனவும் அவர் சாடினார். அப்போது குறுக்கிட்ட வாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் நீதிபதியை அவமானம் செய்தமைக்காகப் பிரதிவாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞருக்குத் தண்டனை வழங்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

இதன்பின்னர் பிரதிவாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் உரத்த தொனியில் இளைஞர்களுக்காகத் தனது வாதங்களை அடுக்கினார். இதன்பின்னர் இரு தரப்புத் தலைமை வழக்கறிஞர்களுக்குமிடையே கடும் வாதப் பிரதிவாதங்களும் இடம்பெற்றன. தற்போதைய இளைஞர்கள் மேற்கொண்டு வரும் சாதனைகளையும், அவர்களின் தனித் தன்மையையும் பட்டியலிட்டார்.

இதனைத் தொடர்ந்து இந்த நீதிமன்றத்தின் கட்டளையின்றி யாரும் தாங்களாக நின்று கருத்துச் சொல்ல முடியாது என நீதிபதி இரா. செல்வா வடிவேல் கடுமையாக இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் எச்சரிக்கை விடுத்தார்.

இதன்பின்னர் வாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் இரண்டாவது குற்றச்சாட்டை முன்வைத்தார். இரண்டாவது குற்றச்சாட்டுக்கெதிராகப் பிரதிவாதிகள் தரப்பின் இரண்டாவது வழக்கறிஞர் கடுமையாக வாதிட்டார். இதன்பின்னர் வாதிகள் தரப்பின் இரண்டாவது வழக்கறிஞர் வாதிட்டார். அதனைத் தொடர்ந்து பிரதிவாதிகள் தரப்பின் தலைமை வழக்கறிஞர் இளைஞர்களுக்காக வெகுண்டெழுந்து வாதிட்டார்.

இறுதியாக வாதிகள் தரப்புத் தலைமை வழக்கறிஞர் கனம் நீதிபதி அவர்களே! இன்றிருக்கும் சூழ்நிலையில் நீங்கள் கனதியான தீர்ப்பை வழங்காவிட்டால் வன்முறைகள் தொடரும். ஆகவே, நீங்கள் கொடுக்கின்ற தீர்ப்பு வரலாற்றுப் பெறுமதியானதொரு தீர்ப்பாக அமைய வேண்டுமென வலியுறுத்தினார்.

இதன்பின்னர் இறுதியாக வழக்காடுமன்ற நீதிபதி இரா. செல்வவடிவேல் தனது தீர்ப்புரையில் , இன்றைய நிலைமைகளுக்கு இளைஞர்கள் மட்டும் தான் காரணமா? என்ற கேள்வி பிரதிவாதிகள் தரப்பு முன்வைத்த வாதங்களில் குறிப்பிட்டது போன்று எழத் தான் செய்கிறது.

வன்முறைகள் தொடர்பான செய்திகளை நாங்கள் தற்போது ஒவ்வொருநாளும் படித்துக் கொண்டிருக்கின்றோம். மொழிப் பற்றை ஊட்டி வளர்க்காதது பெற்றோர்கள் செய்கின்ற தவறாக காணப்படுகின்ற போதும் வாள்வெட்டு வன்முறைகள் மற்றும் போதை வஸ்துப் பாவனைகள் என்பன இளைஞர்கள் தமக்குத் தாமே குழிதோண்டுகின்றதொரு முயற்சி. எந்தவொரு பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் போதைவஸ்துக்கு அடிமையாக வேண்டுமென எண்ண மாட்டார்கள். இந்த எண்ணத்தை இளைஞர்கள் தாங்களாகவே உருவாக்கிக் கொள்கிறார்கள். இது கண்டிக்கப்பட வேண்டியது மட்டுமல்ல இன்றிலிருந்து பாதைகளில் போதை வஸ்துப் பாவனை, வாள்வெட்டுச் சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் அனைவரையும் கைது செய்து அடுத்தநாள் காலையில் விடுவிக்காமல் குறிப்பிட்ட நாள் வரை அவர்களைச் சிறைக்குள்ளேயே வைத்திருக்க வேண்டுமெனக் மேலான காவல்துறைக்கு இந்த நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பிக்கிறது. சட்டம் தான் இவர்களுக்குத் தகுந்த பாடம் புகட்டுமெனவும் குறிப்பிட்டார்.

ஆகவே, வன்முறை மற்றும் ஆடைக் கலாசாரம் ஆகிய விடயங்களில் இன்றைய இளைஞர்களை இந்த நீதிமன்றம் குற்றவாளிகளாக காண்கிறது. முதலாவது குற்றச்சாட்டில் பெற்றோருக்கும், சமூகத்திற்கும் பங்குண்டு என்பதால் இளைஞர்களை விடுதலை செய்வதுடன் இரண்டாம், மூன்றாம் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் இதனையுடன் தொடர்புடைய இளைஞர்களைக் குற்றவாளிகளெனக் கருதி அவர்களைக் கைது செய்ய வேண்டுமெனவும் தீர்ப்புக் கூறினார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ.ரவிசாந்}

RELATED ARTICLES

Most Popular