fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-6
இலங்கைச் செய்திகள்

யாழ். வண்ணை வைத்தீஸ்வர சுவாமி பஞ்சரத பவனி வெகுவிமரிசை

யாழ். நகரை அண்மித்ததாக குடிகொண்டிருக்கும் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீமத் வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானத்தின் பஞ்சரத பவனி இன்று புதன்கிழமை (20) சிறப்பாக இடம்பெற்றது.

இன்று அதிகாலை எம் பெருமானுக்கு விசேட அபிஷேக பூசைகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து காலை–07.30 மணியளவில் வசந்த மண்டபப் பூசைகள் இடம்பெற்றது. வசந்த மண்டபப் பூசைகளைத் தொடர்ந்து விநாயகப் பெருமான், வள்ளி தெய்வயானை சமேத முருகப் பெருமான், சோமாஸ்கந்த மூர்த்தமாக வாலாம்பிகை சமேத ஸ்ரீ வைத்தீஸ்வரப் பெருமான், அம்பாள், சண்டேஸ்வரப் பெருமான் ஆகிய தெய்வங்கள் உள்வீதியில் எழுந்தருளி உலா வந்தனர்.

அதனைத் தொடர்ந்து காலை- 09 மணியளவில் அடியவர்களின் அரோகராக் கோஷம் முழங்க பஞ்சரதங்களில் ஐந்து தெய்வங்களும் எழுந்தருளினர்.

சிதறுதேங்காய் உடைக்கப்பட்டதைத் தொடர்ந்து காலை-09.30 மணியளவில் பஞ்சரத பவனி ஆரம்பமாகியது. பிரதான தேர் வடத்தை ஆண், அடியவர்கள் ஒருபுறமும் , பெண் அடியவர்கள் மறுபுறமும் தொட்டிழுத்தனர்.

வண்ணை வைத்தீஸ்வர சுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகிய பஞ்சரத பவனி காங்கேசன்துறை வீதி, மானிப்பாய் வீதி, சிவன் வடக்கு வீதி வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. பஞ்சரத பவனி வீதி வலம் வந்த போது இல்லங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் அடியவர்கள் பூரண கும்பம் வைத்து, மங்கள விளக்கேற்றி பக்திபூர்வமாக பஞ்சரதங்களையும் வரவேற்ற காட்சி அற்புதமானது.

பிற்பகல்-12.30 மணியளவில் பஞ்சரதங்களும் இருப்பிடத்தை வந்தடைந்ததைத் தொடர்ந்து அடியவர்கள் அர்ச்சனை செய்து வழிபாடாற்றினர்.

வருடாந்தம் நீண்டதூரம் இவ்வாலய பஞ்சரத பவனி சிறப்பாக இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் இம்முறை இடம்பெற்ற பஞ்சரத பவனியில் கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர்.

இதேவேளை, கடந்த-04 ஆம் திகதி ஆரம்பமான இவ்வாலய வருடாந்தப் பெருந்திருவிழா தொடர்ச்சியாக 18 தினங்கள் இடம்பெற்று வருகின்றன. நாளை காலை- 10 மணிக்கு தேவஸ்தானத்தில் அமைந்துள்ள சித்தாமிர்த புட்கரணியில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.

Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-7
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-1
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-2
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-4
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-3
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-6
Vannai-Vaitheeswaran-Swamy-chariot-festival-5

Related posts

வடக்கில் இன்றும் அதிகரித்த வேகத்தில் காற்று!

TamilTwin

கிழக்கு மாகாணத்தில் ஆசிரிய சேவைக்கு 2000 பேர் உள்ளீர்ப்பு

World News

தமிழ்மக்கள் கூட்டணியினருக்கு கஜேந்திரகுமார் விடுத்துள்ள பகிரங்க சவால்!! (Photos)

TamilTwin