யாழ். வடமராட்சி கிழக்கு பனிக்கையடிப் பகுதியில் வீதியில் அநாதரவாக காணப்பட்ட கடதாசிப் பெட்டியொன்றிலிருந்து வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறித்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(14) நண்பகல் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பகுதியிலுள்ள ஆழியவளை அபாய வெளியேற்றப் பாதையிலிருந்து குறித்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேற்படி வீதி வழியாகச் சென்றவர்கள் அநாமதேயமாக காணப்பட்ட கடதாசிப் பெட்டியொன்றை அதன் அருகே சென்று பார்வையிட்ட போது அதற்குள் துருப்பிடித்த நிலையில் இரண்டு மிதிவெடிகள் மற்றும் கைக்குண்டு என்பன இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இதனையடுத்துக் குறித்த சம்பவம் தொடர்பாகப் பளைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. பளைப் பொலிஸார் குறித்த வெடிபொருட்களை கைப்பற்றித் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.