fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ்.மானிப்பாயில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் திறந்து வைப்பு

வைத்திய கலாநிதி அம்பலவாணர் பொன்னம்பலத்தினால் அன்பளிப்புச் செய்யப்பட்ட நிலத்தில் சிவபூமி அறக்கட்டளையின் ஆதரவில் அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் இன்று ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல்-04 மணியளவில் மானிப்பாய் கூழாவடியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் இலண்டலிருந்து வருகை தந்த பிரபல வைத்திய நிபுணர் க.பிரதீபன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ஆரம்ப மருத்துவப் பரிசோதனை இடம்பெற்றது.

அதனைத் தொடர்ந்து மேற்படி சேவை நிலைய முன்றலில் இடம்பெற்ற நிகழ்வில் அமெரிக்காவின் ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகள், செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியகலாநிதி த. சத்தியமூர்த்தி, குழந்தை வைத்திய நிபுணர் எஸ். சிவகுமாரன் ஆகியோர் உரையாற்றினார்கள்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 05.30 மணி முதல் இரவு- 08 மணி வரை நுரையீரல் சம்பந்தமான இலவச வைத்திய நிபுணர் க.பிரதீபன் தலைமையிலான விசேட வைத்திய நிபுணர்களால் நோயாளர்களுக்கான இலவச வைத்திய சேவை இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் சித்தன்கேணி வீணாகான குருபீட முதல்வர் சிவஸ்ரீ சபா. வாசுதேவக்குருக்கள், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தினக்குரல் பத்திரிகையின் ஸ்தாபகரும், பிரபல தொழிலதிபருமான எஸ்.பி. சாமி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், வாழ்நாள் பேராசிரியருமான பொ. பாலசுந்தரம்பிள்ளை, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் ச.லலீசன், யாழ்ப்பாணப் பல்கலைக் கழக ஆங்கிலத் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி- கந்தையா ஸ்ரீகணேசன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறைப் பேராசிரியர் கா.கிருஷ்ணகுமார், வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. விஜயசுந்தரம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா, சிவபூமி அறக்கட்டளையின் பொருளாளரும், கண் வைத்திய நிபுணருமான எஸ்.குகதாஸ், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய நிபுணர்கள், கல்வியியலாளர்கள், பல்துறை சார்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இன்று திறந்து வைக்கப்பட்ட அபயம் இலவச மருத்துவ சேவை நிலையம் மூலம் வறுமைக் கோட்டுக்குட்பட்ட நோயாளர்களுக்கான இலவச மருத்துவ சேவைகளும், கல்வியை மேம்படுத்துவதற்கான சேவைகளும் பிரதானமாக முன்னெடுக்கப்படவுள்ளன. வெளிநாட்டு வைத்திய நிபுணர்களுடன் உள்நாட்டு வைத்திய நிபுணர்களும் குறித்த சேவை நிலையம் மூலம் நோயாளர்களுக்கான சேவைகளை முன்னெடுக்கப்படவுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Abayam-Medical-Clinic-Centre-Jaffna-Opening
Abayam-Medical-Clinic-Centre-Jaffna-Opening
Abayam-Medical-Clinic-Centre-Jaffna-Opening

Related posts

வேட்பாளர்களுக்கு இன்று நண்பகல் வரை அவகாசம்!

TamilTwin

பல்கலைக்கழக மாணவி கழுத்தறுத்துக் கொலை! குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

World News

யாழில் 36 பேருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை: வெளியாகியுள்ள முடிவு!

TamilTwin