fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ்.பல்கலை மாணவரது இலக்கு சர்வதேச சமூகத்தை எட்ட வேண்டும்!: மாவை எம்.பி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரதும் , தமிழ்மக்கள் பேரணியின் இலக்கும் ஐ. நா மனித உரிமைகள் சபை, மற்றும் சர்வதேச சமூகத்தை எட்ட வேண்டும். இலங்கையின் இணை அனுசரணையுடன் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை குறுகிய கால அட்டவணைக்குள் இலங்கை நிறைவேற்றா விட்டால் ஐ. நா மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதற்கான பொருத்தமான தீர்மானங்களை ஐ. நா மனித உரிமைகள் சபை, ஐ. நா பாதுகாப்புச் சபை, வல்லாண்மை நாடுகள் இராஜதந்திர ரீதியில் எடுக்க நாம் ஒன்றுபட வேண்டுமெனத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சோ. சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

Mavai Senathirajah MP

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நாளை சனிக்கிழமை(16) யாழில் “நீதிக்காய் எழுவோம்” எனும் தொனிப் பொருளில் மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணியொன்று இடம்பெறவுள்ளது.

குறித்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

கடந்த-2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா பொதுச் செயலாளர் பான்கீமூன் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். அப்போதைய ஜனாதிபதி மகிந்தவைச் சந்தித்தார். போர்க் குற்றங்களை விசாரிக்கவும், இலங்கை இனப் பிரச்சினை உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இருவரும் உடன்பட்டனர்.

2011 ஆம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டனர். அவர்களுடன் பேச்சு நடாத்தப்பட்டது. இதன் விளைவாக 2012 ஆம் ஆண்டு அமெரிக்கா ஐ. நா மனித உரிமைகள் சபையில் தீர்மானத்தை நிறைவேற்றியது. அதனையும் சிலர் ஜெனீவாவில் தீயிட்டுக் கொளுத்தினர். அது துரதிஷ்ட வசமானது.

2013 ஆம் ஆண்டு ஐ. நா மனித உரிமைகள் சபையின் அப்போதைய ஆணையாளர் நவநீதம்பிள்ளை இலங்கை வருகை தந்தார். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளையும் சந்தித்தார். இலங்கை தொடர்பில் கடும் தொனியில் அறிக்கை வெளியிட்டதுடன் போர்க்குற்ற விசாரணைக்கான நகர்வுகளையும் முன்னெடுத்தார்.

2014 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கமைய ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தால் விசாரணை நடாத்தப்பட்டது. 2015 ஆம் ஆண்டில் ஹைசன் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கை தொடர்பான ஐ.நா தீர்மானம் இலங்கையின் அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்டது. இது பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதலளித்தது.

2016 ஆம் ஆண்டு ஆணையாளர் ஹைசன் இலங்கை வருகை தந்தார். இலங்கை தொடர்பாக தனது ஏமாற்றத்தை வெளியிட்டார்.

இதன் பின்னர் 2017 ஆம் ஆண்டு 34/1 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இது இராஜதந்திர வெற்றியாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இலங்கை அரசாங்கம் தீர்மானங்களை முழுமையாக நடைமுறைப்படுத்தத் தவறி விட்டது.

ஐ. நா மனித உரிமைகள் சபையின் தற்போதைய ஆணையாளர் இலங்கை தொடர்பில் அறிக்கை முன்வைத்துள்ளார். அது பாராட்டக் கூடிய விதத்திலுள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

திருமூலருக்கு யாழ். நல்லூரில் விழாவெடுத்த யாழ். யோகா உலகம் அமைப்பு: கடின யோகா செய்து அசத்திய சிறார்கள் (Video,Photos)

TamilTwin

யாழில் நாளை மின்தடைப்படும் பகுதிகள் இதோ….

TamilTwin

சாதனைத்தமிழன் நினைவாக யாழ்.வல்வெட்டித்துறையில் சர்வதேச தரம் மிக்க நீச்சல் தடாகம் திறப்பு! (Photos)

TamilTwin