யாழ். தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு இன்று செவ்வாய்க்கிழமை(12) சம்பிராதயபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியகர் யோ. திவாகர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் இலங்கைக்கான பொறுப்பாளர் சட்டார், யுனிசெப் நிறுவனத்தின் அதிகாரி டாக்டர் சபீனா அப்துல் லோவா ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மேற்படி சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைத்தனர்.
யுனிசெப் நிறுவனத்தின் பல இலட்சம் ரூபா நிதிப் பங்களிப்பில் குறித்த விசேட சிகிச்சைப் பிரிவு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்தச் சிகிச்சைப் பிரிவு வடமாகாணத்தில் யுனிசெப் நிறுவனத்தால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஐந்தாவது சிகிச்சைப் பிரிவாகும்.
யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஏற்கனவே சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு இயங்கி வருகின்றது. இந்நிலையில் யாழ்ப்பாணத்தில் அனைத்து வசதிகளுடனும் கூடிய இரண்டாவது சிசுக்கள் விசேட சிகிச்சைப் பிரிவு இன்றைய தினம்(12) தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் யுனிசெப் நிறுவனத்தின் வடமாகாணப் பிரதம களப் பணி உத்தியோகத்தர் நடராஜா சுதர்மன்,வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி இ. தேவநேசன், வலி. வடக்குப் பிரதேச சபையின் தவிசாளர் சோ. சுகிர்தன், வலி. வடக்குப் பிரதேச சபையின் உறுப்பினர்கள், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் குழந்தை வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி நமசிவாயதேசிகர் சரவணபவா, தாதிய பரிபாலகர் சோ.இராஜேந்திரன், வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை நலன்புரிச்சங்க உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை, விசேட தேவையுடைய குழந்தைகள் குறித்த சிகிச்சைப் பிரிவில் பராமரிக்கப்படவுள்ளதாக மேற்படி வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியகலாநிதி யோ. திவாகரன் தெரிவித்தார்.




