சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, சமூக மேம்பாட்டுக் கழகம், சமூக மேம்பாட்டு இணையம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் விசேட பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10-03-2019) பிற்பகல்-03.30 மணி முதல் யாழ். கொக்குவில் சந்தியிலுள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பின் தலைவி சிவாஜினி சுரேஸ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சர்வதேச ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான துளசி முத்துலிங்கம், தொழிற்சங்க செயற்பாட்டாளர் தீபா ஸ்ரீதரன், வலி. கிழக்குப் பிரதேச சபை உறுப்பினர் சசிநந்தினி தேவன், ஆசிரியர் உமாதேவி பார்த்தீபன் ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகள் நிகழ்த்தினர்.
விசேட உரைகளைத் தொடர்ந்து பெண்ணியம் சம்பந்தமான கலந்துரையாடல்களும் , கலைநிகழ்வுகளும் இடம்பெற்றது.
விசேட உரைகள் நிகழ்த்தியவர்கள் பெண்கள் தற்போது பல்வேறு துறைகளிலும் தடம் பதித்தாலும் பெண்கள் தொடர்பான சமூகப் பார்வையில் எதிர்பார்த்தளவு முன்னேற்றம் ஏற்படாதது தொடர்பாகத் தமது கவலையை வெளியிட்டனர்.
இதேவேளை, இந்த நிகழ்வில் புதிய ஜனநாயக மார்க்சிச லெனினிஸக் கட்சியின் வடபிராந்தியச் செயலாளர் கா. செல்வம் கதிர்காமநாதன், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் தலைவர் க.ஆனந்தகுமாரசுவாமி, சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ச. தனுஜன், மூத்த எழுத்தாளர்கள் க. தணிகாசலம், கே. எஸ். சிவஞானராஜா, அரசியல், சமூகச் செயற்பாட்டாளர்கள், பல்துறைசார்ந்தவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.



