fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

யாழ்.குடாநாட்டில் உருளைக் கிழங்குச் செய்கையும் உற்பத்தியாளர்கள் எதிர்கொண்டுள்ள சவால்களும்

யாழ். குடாநாட்டில் உருளைக்கிழங்கு அறுவடை நிறைவடைந்துள்ளது. இம்முறை உருளைக் கிழங்கு விளைச்சல் அமோகமாகவுள்ளதாக விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது.

போதிய விதை உருளைக் கிழங்கு இன்மையால் இம்முறை யாழ்.குடாநாட்டில் 106 ஹெக்டேயர் நிலப் பரப்பில் மாத்திரமே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதன்படி யாழ். உடுவில் உருளைக் கிழங்கு சங்கத்திற்குட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் ஏழாலை, குப்பிழான், ஈவினை, புன்னாலைக்கட்டுவன், சுன்னாகம், இணுவில் ஆகிய பகுதிகளிலும் , யாழ்.மாவட்ட உருளைக்கிழங்குச் சங்கத்திற்குட்பட்ட பகுதிகளான இடைக்காடு, கதிரிப்பாய், அச்சுவேலி, பத்தமேனி, நவக்கிரி, சிறுப்பிட்டி, புத்தூர், நீர்வேலி, கோப்பாய், அச்செழு, உரும்பிராய், ஊரெழு, வசாவிளான், மானிப்பாய், சண்டிலிப்பாய் ஆகிய பகுதிகளிலும் உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

வழமை போன்று இவ்வருடமும் உடுவில் உருளைக் கிழங்குச் சங்கத்திற்குட்பட்பட்ட வலிகாமம் பிரதேசத்தில் உருளைக் கிழங்குச் செய்கையில் விவசாயிகள் அதிகளவில் ஆர்வம் காட்டியிருந்தனர். விதை உருளைக் கிழங்குகள் போதியளவு இறக்குமதி செய்யப்படாமையால் வழமையை விட இவ்வருடம் குறைந்தளவிலான ஹெக்டேயர் நிலப் பரப்பிலேயே உருளைக் கிழங்குச் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால், உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் வழமை போன்று எதிர்பார்த்த வருமானத்தை இவ்வருடம் ஈட்ட முடியவில்லை.

வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் இறக்குமதி வரி இம்முறை அரசாங்கத்தால் அதிகரிக்கப்பட்டிருந்தது. உள்ளூர் விவசாயிகளின் நலனடிப்படையில் அவர்களுக்குச் சலுகை வழங்கும் வகையில் குறித்த வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டிருந்தது. இவ்வருடம் உருளைக் கிழங்கு அறுவடை சீசன் ஆரம்பிப்பதற்கு முன்னரே வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையால் உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் நன்மையடைந்துள்ளனர்.

ஒரு போகத்திற்கு கால் ஏக்கர் நிலப்பரப்பில் உருளைக்கிழங்கு உற்பத்தி செய்வதற்கான உற்பத்திச்செலவு வருமாறு, விவசாய நிலத்தை உழுவதற்கு 1200 ரூபா, அரை லொறி எருவைக் கொள்வனவு செய்வதற்கு 20 ஆயிரம் ரூபா, எரு அள்ளிப் பரவுவதற்கு 2000 ரூபா, மீண்டும் மீண்டும் உழுது பண்படுத்த 2000 ரூபா, கிழங்கு நடுகை கூலி 6000 ரூபா, களை நாசினி 600 ரூபா, மூட்டு அணைக்க 4000 ரூபா, ஒன்றரை அந்தர் உரம் 4200, கிருமி நாசினி மற்றும் பங்கஸ் நாசினி 7500 ரூபா, கிருமி நாசினி தெளி கூலி 1750, இறைப்புக் கூலி 4000 ரூபா, இறைப்புக் கரண்ட் காசு-400 ரூபா, சாப்பாடு, தேநீர்-2200, குத்தகைக்கு விவசாய நிலத்தில் பயிரிட்டிருந்தால் அதற்கான நிலக்காசு-1000 ரூபா, அறுவடை ஆண் கூலி ஒருவருக்கு 1500 ரூபா படி மூன்று பேருக்கு 4500 ரூபா, அறுவடை பெண் கூலி ஒருவருக்கு 600 ரூபா படி ஐவருக்கு 4500 ரூபா தேவைப்படுகிறது. மானிய அடிப்படையிலான மூன்று அந்தர் விதைக்கிழங்கு கொள்வனவுக்கு 22,500 ரூபாவையும் சேர்த்து கால் ஏக்கர் நிலப்பரப்பிற்கு மொத்த உற்பத்திச் செலவாக 86 ஆயிரத்து 850 ரூபா தேவைப்படுகிறது.

கால் ஏக்கரில் பயிரிடப்படும் விதை உருளைக்கிழங்கை உரிய பராமரிப்பதன் மூலம் 2000 கிலோ உருளைக்கிழங்கை அறுவடையாகப் பெற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட உருளைக்கிழங்கைத் தம்புள்ள சந்தைக்கு எடுத்துச் சென்று சந்தைப்படுத்துவதற்கு ஒரு சாக்கிற்கு 70 ரூபா வீதம் 40 சாக்குகளுக்கும் 2800 ரூபாவும், சாக்குக்கான நூல் செலவு 50 ரூபாவும், லொறிக் கூலி 40 சாக்குகளிற்கும் ஒரு சாக்கிற்கு 150 ரூபா வீதம் மொத்தமாக 6000 ரூபாவும், மூட்டை போடுவதற்கு ஒரு கூலிக்கு 1200 ரூபா வீதம் இரண்டு கூலிகளுக்கு 2400 ரூபாவும், இதனைவிட விற்பனையின் போது கமிசன் கூலிகளையும் சேர்த்து மொத்தமாக 15,250 ரூபா செலவு தேவைப்படுகிறது.

கால் ஏக்கர் உருளைக்கிழங்கில் அறுவடையாகும் உருளைக்கிழங்கின் உற்பத்திச் செலவுகளுடன், சந்தைப்படுத்தல் செலவுகளையும் சேர்த்து மொத்தமாக ஒரு இலட்சத்து 100 ரூபா பணம் தேவையாகவுள்ளது. இந்த அடிப்படையில் நோக்கினால் ஒரு கிலோ உருளைக்கிழங்கின் உற்பத்திச் செலவு 60 ரூபாவாகவுள்ளது. ஆனால், இவ்வருடம் மானிய அடிப்படையில் விதை உருளைக்கிழங்கு வழங்கப்பட்டுள்ளமையால் ஒரு கிலோ உருளைக்கிழங்கின்உற்பத்திச் செலவு 50 ரூபா முதல் 52 ரூபா வரை காணப்படுகிறது.

அறுவடை செய்யப்படும் ஒரு கிலோ உருளைக்கிழங்கு குறைந்தது 80 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதன் மூலமே உற்பத்திச் செலவு தவிர்ந்த மீதிப் பணத்தை இலாபமாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது விவசாயிகளின் கருத்தாகவுள்ளது.

இவ்வருடம் வரி அதிகரிப்புக் காரணமாக உற்பத்தியாளர்கள் பயனடைந்த போதிலும் கடந்த காலங்களில் உரிய காலப் பகுதிகளில் வரி அதிகரிப்பு மேற்கொள்ளப்படாமையால் யாழ்.உருளைக் கிழங்குச் செய்கையாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியா, வெலிமடை ஆகிய இடங்களில் யாழ்.குடாநாட்டை விட இரண்டு மடங்கு அதிகமான உருளைக்கிழங்கு அறுவடை உற்பத்தி செய்யப்படுகின்றது. இவ்வாறான காரணமும், நாட்டில் உருளைக்கிழங்கு உற்பத்தியாளர்கள் பத்து வீதமாகக் காணப்படுகின்ற நிலையில் நுகர்வோர் 90 வீதமாகக் காணப்படுகின்றமையும் உருளைக்கிழங்கு இறக்குமதி வரி அதிகரிப்பில் செல்வாக்குச் செலுத்தும் காரணிகளாகவுள்ளன.

உருளைக்கிழங்கு நடுகை செய்வதற்கு முன்னரே வெளிநாட்டு உருளைக்கிழங்குகளுக்கான இறக்குமதி வரி அதிகரிப்பை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதே யாழ்.குடாநாட்டு உருளைக்கிழங்குச் செய்கையாளர்களின் கோரிக்கையாகவுள்ளது.

எனினும், யாழ்.குடாநாட்டில் வருடம் தோறும் கிடைக்கும் உருளைக்கிழங்கு உற்பத்தி முழு இலங்கையினதும் நாளாந்த தேவைகளை முழுமையாக ஈடு செய்யக் கூடியதொன்றல்ல.யாழில் உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்கு மொத்த இலங்கையின் உணவுத் தேவையடிப்படையில் நோக்கினால் ஒரு சில நாட்களுக்கு மாத்திரமே போதுமானதாகவிருக்கும். இவ்வாறான சிறியளவிலான உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டு அரசாங்கம் உடனடியாக வரி அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்ப்பதும் கடினமானதொன்று. அரசாங்கம் முழு நாட்டின் நலன்களை முன்னிறுத்தியே முடிவுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளமை முக்கியமான விடயம்.

இதேவேளை, வரி அதிகரிப்பால் குறிப்பிட்ட விவசாயிகள் மாத்திரம் நன்மையடைய ஏனைய விவசாயிகள் பாதிப்பினை எதிர்கொள்வது தொடர்பில் அரசாங்கம் கரிசனை செலுத்த வேண்டியதும் அவசியமாகும். ஏனெனில், தமது உற்பத்திக்கு உரிய விலை கிடைக்காமையினால் பல விவசாயிகள் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் இத்தகைய செயற்பாடு காரணமாக உருளைக்கிழங்கு விலை அதிகரிப்பிற்கு முன்னர் அறுவடை மேற்கொண்டவர்கள் கடும் அதிருப்திக்குள்ளாகியுள்ளனர்.

ஆகவே, விவசாயிகள் எதிர்பார்க்கும் விலை அதிகரிப்பு உருளைக்கிழங்கு அறுவடை ஆரம்பமாவதற்கு முன்னரே ஏற்பட வேண்டுமாயின் யாழ். குடாநாட்டில் விளைவிக்கப்படும் உருளைக்கிழங்கு உற்பத்தி எதிர்காலத்தில் அதிகரிக்கப்பட வேண்டியது அவசியமாகவுள்ளது.

யாழ்.மக்களால் பணப்பயிர் என அழைக்கப்படும் புகையிலை உற்பத்தியை எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு முதல் தடை செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் மாற்றுப் பயிர்ச் செய்கையாக உருளைக்கிழங்குச் செய்கை போன்றவற்றில் எமது விவசாயிகள் ஈடுபட முன்வர வேண்டும்.

வரி அதிகரிப்பிற்கு மத்திய அரசாங்கத்தை மாத்திரம் நம்பியிருப்பதைத் தவிர்ப்பதற்கு அமையவுள்ள வடமாகாண சபை பொருத்தமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வடமாகாண விவசாயிகள் அனைவரும் நன்மை பெறும் வகையில் வடமாகாணத்தில் பொருத்தமானதொரு இடத்தில் பொருளாதார மத்திய நிலையம் நிறுவப்பட வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் தமது உற்பத்திப் பொருட்களை அதிகரித்த கேள்வியுடனும், நியாயமான விலைகளுடனும் சந்தைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இதுவே, யாழ். குடாநாட்டு விவசாயிகளினதும் எதிர்பார்ப்பாகவுள்ளது.

potatoes  in jaffna

{கட்டுரையாக்கம் மற்றும் காணொளி:- செல்வநாயகம் ரவிசாந்-}

Related posts

நள்ளிரவின் பின் நாடாளுமன்றம் கலைக்கப்படுமா?

TamilTwin

நாடு திரும்பினர் லண்டனில் சிக்கியிருந்த 278 இலங்கையர்கள்!

TamilTwin

ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பம்!

World News