Tuesday, December 7, 2021
Homeசெய்திகள்இலங்கைச் செய்திகள்யாழ். ஏழாலையில் மீண்டும் பாரிய மரக்கறித் திருட்டு

யாழ். ஏழாலையில் மீண்டும் பாரிய மரக்கறித் திருட்டு

யாழ். ஏழாலை கிழக்குப் பகுதியிலுள்ள விவசாய நிலங்களில் மீண்டும் பாரிய மரக்கறித் திருட்டு இடம்பெற்றுள்ளது. குறித்த திருட்டுச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை(28-02-2019)  அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, 

ஏழாலை கிழக்குப் பகுதியில் விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார்- 600 கிலோ கறி மிளகாய்களைக் கைகளால் பிடுங்கிச் சென்றுள்ளனர். திருட்டில் ஈடுபட்ட திருடர்கள் நூற்றுக்கணக்கான கறி மிளகாய்ச் செடிகளையும் முறித்து நாசமாக்கிச் சென்றுள்ளனர். ஏழாலை கிழக்கைச் சேர்ந்த தவகுலசிங்கம் உதயகுமார் என்பவரின் விவசாய நிலத்திலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சுமார்- 60 ஆயிரம் ரூபா பெறுமதியான கறிமிளகாய்கள் இவ்வாறு திருட்டுப் போயுள்ளதாக கறிமிளகாய் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 

மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற பகுதிக்கு அண்மையாக அமைந்துள்ள மற்றொரு விவசாய நிலத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கு பயிரிடப்பட்டிருந்த சுமார்-50 கிலோ பச்சை மிளகாய்கள், 40 கிலோ பாகற்காய், 30 கிலோ புடலங்காய், பூசணிக்காய்கள் என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர். இதன் மொத்தப் பெறுமதி சுமார்- 25 ஆயிரம் ரூபா எனக் கணக்கிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் பகல் பிடுங்குவதற்குத் தயாராகவிருந்த மரக்கறிகளே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளதாக ஏழாலை மத்தியைச் சேர்ந்த கதிரவன் தங்கவடிவேல்(வயது-69) கவலையுடன் தெரிவித்தார். 

மரக்கறித் திருட்டு


மரக்கறித் திருட்டு

மேற்படி விவசாயிகளில் தவகுலசிங்கம் உதயகுமார் இதே விவசாய நிலத்தில் கடந்த பெப்ரவரி மாதம்-07 ஆம் திகதி அதிகாலை சுமார் 400 கிலோ கறி மிளகாய்களும், சுமார்- 250 கிலோ உருளைக்கிழங்குகளும் திருட்டுப் போயிருந்தன. குறித்த சம்பவம் இடம்பெற்று ஒரு மாதமாவதற்குள் இந்தத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளமையால் மேற்படி விவசாயி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். மற்றைய விவசாயியான கதிரவன் தங்கவடிவேலின் விவசாய நிலத்திலும் அடிக்கடி மரக்கறித் திருட்டுக்கள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகிறது. இதனால் விவசாயத்தையே வாழ்வாதாரமாக நம்பியுள்ள அவரும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளார். 

இதேவேளை, நேற்றைய தினம் இடம்பெற்ற மேற்படி திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்ட நிலையில் பொலிஸ் அதிகாரியொருவர் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளைப் பார்வையிட்டுள்ளார். அவரது ஆலோசனைக்கமைய பாதிக்கப்பட்ட விவசாயிகள் நேற்றுப் பிற்பகல் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறையிடச் சென்ற போதும் அவர்களின் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுத்துப் பொலிஸார் அவர்களைத் திருப்பியனுப்பியுள்ளனர். 

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் கடும் ஆதங்கமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments