யாழ். இணுவில் இந்துக் கல்லூரியில் அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை வேலைத் திட்டத்தின் கீழ் கல்வியமைச்சினால் இரண்டு கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப் பெற்ற தொழில்நுட்பக் கூட கட்டடத் திறப்பு விழா இன்று வெள்ளிக்கிழமை(29) நண்பகல்- 12 மணியளவில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் தி.தேவதயாளன் தலைமையில் இடம்பெற்ற விழாவில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்ப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் பிரதம விருந்தினராகவும், வலிகாமம் கல்வி வலய கல்வி முகாமைத்துவ பிரதிக் கல்விப் பணிப்பாளர் சி. மதியழகன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன், முன்னாள் கோட்டக் கல்விப் பணிப்பாளர் கு.சண்முககுலகுமாரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.
விருந்தினர்கள் இணுவில் கந்தசுவாமி ஆலய முன்றலிலிருந்து மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் கல்லூரி நோக்கி அழைத்து வரப்பட்டனர். விருந்தினர்கள் கல்லூரியை அண்மித்ததும் மங்கள வாத்தியங்களுடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட தர்மலிங்கம் சித்தார்த்தன் தனது சார்பில் ஆரம்பப் பிரிவு மாணவியொருவரது கரங்களால் புதிதாக நிர்மாணிக்கப் பெற்ற தொழில்நுட்பக் கூடத்தைச் சம்பிரதாயபூர்வமாகத் திறந்து வைக்கச் செய்தார். அதனைத் தொடர்ந்து மேற்படி கட்டடத்துக்கான பெயர்ப் பலகை தர்மலிங்கம் சித்தார்த்தனால் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கல்லூரியின் பிரதான மண்டபத்தில் தொழிநுட்பக் கூட கட்டடத் திறப்பு விழாவையொட்டிய நிகழ்வுகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.




