யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகள் அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் ஆய்வு தினம் நேற்று வியாழக்கிழமை(14) முற்பகல்-11.30 மணி முதல் மேற்படி கல்லூரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
கல்லூரியின் ஆய்வுகள் அபிவிருத்திப் பிரிவின் தலைவர் நிரஞ்சன் தனுரேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் கற்கைகள் பீட பீடாதிபதி ஜி. மிகுந்தன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட ஜி. மிகுந்தன் ஆய்வுத் துறை சார்ந்து சிறப்புரையாற்றியதுடன் கல்லூரி முதல்வர் சதா. நிமலனும் உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் “இன்றைய காலத்தில் பெரிதும் தேவைப்படுவது இயற்கையுடன் இணைந்த வாழ்வா? தொழில்நுட்பத்துடன் இணைந்த வாழ்வா?” எனும் தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் இடம்பெற்றது. சொல்லின் செல்வர் இரா. செல்வவடிவேல் தலைமையில் ஆரம்பமான பட்டி மன்றத்தில் கல்லூரியில் க. பொ. த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் பங்குபற்றினர். ஒரு அணியில் மூன்று மாணவர்கள் வீதம் இரு அணிகள் பங்குபற்றிய இந்தப் பட்டி மன்றத்தில் மாணவர்கள் தமது சிறப்பான பேச்சாற்றலை வெளிப்படுத்தினர். இறுதியில் “இன்றைய காலத்தில் பெரிதும் தேவைப்படுவது தொழில்நுட்பத்துடன் இணைந்த வாழ்வு! என்ற அணி வெற்றி பெற்றது.
தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சினால் கடந்த- 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் தேசிய ரீதியாக் நடாத்தப்பட்ட ஆய்வுப் போட்டியில் கலந்து கொண்டு ஆய்வினைப் பூர்த்தி செய்த மாணவர்களுக்குப் பெறுமதியான சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து இதுவரை 86 கண்டுபிடிப்புக்கள் கண்டுபிடித்து தமிழினத்துக்கே பெருமை சேர்த்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் சோமசுந்தரம் வினோஜ்குமார் ஆய்வுத் துறை சார்ந்து தனது அனுபவங்களை மாணவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுடன் அயற்பாடசாலை மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.




