வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளுக்கான விசேட கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை(26) காலை-09.30 மணி முதல் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது.
வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத் தலைவர் சேயோன் குலேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடமாகாணத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் கலந்து கொண்டனர்.மேற்படி கலந்துரையாடலில் ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவர் தன்னே ஞானனாந்த தேரரும் கலந்து கொண்டார்.
அவர் நாளை மறுதினம்(28) கொழும்பு மருதானைப் பகுதியில் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளுக்கென எந்தவிதத் தீர்மானமும் எடுக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகளையும் ஒன்றிணைத்து இடம்பெறவுள்ள பாரிய முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளையும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார். ஒன்றிணைந்த வேலையற்ற பட்டதாரிகள் சங்கத் தலைவரின் அழைப்பை ஏற்று வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளின் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொள்வதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதே காரணத்தை முன்வைத்து எதிர்வரும்- 03 ஆம் திகதி புதன்கிழமை காலை வடமாகாண வேலையற்ற பட்டதாரிகளால் யாழ்.மாவட்டச் செயலகம் முன்பாக மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுப்பதெனவும் இன்றைய கலந்துரையாடலின் போது தீர்மானிக்கப்பட்டது.


