அறநெறிக் கல்வி புதிய பாடத்திட்டத்திற்கமைவாக வெளியிடப்பட்ட நீதி நூற் தொகுப்புக்கள் அறிமுக விழா இன்று சனிக்கிழமை(09) காலை-09 மணி முதல் யாழ்ப்பாணம் நீராவியடியிலுள்ள இலங்கை வேந்தன் கலைக் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
“அறவழி நின்று அகிலத்தை வெல்வோம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த நிகழ்வு சிவபூமி அறக் கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தலைமையில் இடம்பெற்றது.
மங்கள இசை நிகழ்வுடன் ஆரம்பமாகிய நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.
குறித்த விழாவில் நல்லை ஆதீன குரு முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசியுரை ஆற்றியதுடன் தொடக்கவுரையை இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் அ. உமாமகேஸ்வரன் தொடக்கவுரை நிகழ்த்தினார்.
விழாவில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலைகளுக்கான நூல்கள் சம்பிரதாயபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. நூல் அறிமுகவுரையை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக இந்து நாகரீகத் துறை விரிவுரையாளர் தி. செல்வமனோகரன் நிகழ்த்தினார்.
இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆணையாளர் த. ஜெயசீலன்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா, இந்துசாதனம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் தி. மயூகிரிக் குருக்கள், இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர்களான இ. கர்ஜின், திருமதி- ஹேமலோஜினி குமரன், இந்துசமயக் குருமார்கள், வடமாகாணத்தைச் சேர்ந்த அறநெறிப் பாடசாலைப் பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
