கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி -கே.நகுலராஜா மோசடியில் ஈடுபட்டுள்ள நிலையில் கல்வியமைச்சுக்கு அவர் தற்காலிகமாக இடமாற்றப்பட்டிருந்தார். எனினும், இடமாற்ற உத்தரவுகளைப் பின்பற்றாமல் குறித்த அதிபர் தொடர்ந்தும் பாடசாலை வகுப்பறைகளையே தனது தங்குமிடமாக்கி இருந்துவருகின்றமை தொடர்பாக கல்வியமைச்சு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரியின் அதிபர் திருமதி கே.நகுலராஜா மோசடியில் ஈடுபட்டுள்ளமை தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சுக்கும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் கடந்த வருடம் முறைப்பாடு செய்திருந்தது.
இதனடிப்படையில் குறித்த அதிபருக்குப் பாடசாலையிலிருந்து கல்வியமைச்சுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப்பட்டிருந்த போதும் இடமாற்ற உத்தரவைப் பின்பற்றாமல் பாடசாலையின் நான்கு வகுப்பறைகளைத் தனது தங்குமிடமாக வைத்திருந்தார். இந்த நிலையில்
குறித்த அதிபருக்கு கடந்தவாரம் ”முதல் கட்ட விசாரணையை நடைமுறைப்படுத்தல்” தொடர்பான தலைப்பிட்டு கல்வியமைச்சால் மீண்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணை அறிக்கையில் பின்வரும் விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. குறித்த அறிக்கையின் பந்தி 2 இல் -Ed/5/301/19/04/28 இலக்க 11.01. 2019 திகதிய கடிதத்தின் படி குறித்த அதிபர் தங்குமிடமாகப் பாவிக்கும் வகுப்பறைகளிலிருந்து உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் ED/04/58/20/01/19 இலக்க 18.09.2018 திகதிய கடிதம் மூலம் கல்வியமைச்சுக்குத் தற்காலிகமாக இடமாற்றப்பட்டிருந்த நிலையில் இதுவரை பாடசாலை வகுப்பறைகளில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. எனவே, உடனடியாக குறித்த வகுப்பறைகளை பாடசாலைக்கு வழங்குமாறும் கல்வியமைச்சினால் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் பாடசாலை முன்னாள் அதிபர் திருமதி- கே.நகுலராஜாவுக்கு மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
இதன் பின்னரும் குறித்த அதிபர் தொடர்ந்தும் பாடசாலை வகுப்பறைகளையே தனது தங்குமிடமாக்கி இருந்து வருகின்றமை தொடர்பாக கல்வியமைச்சு விரைவாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் கல்வியமைச்சின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.