Saturday, June 25, 2022
HomeNews and Viewsமுதுமையில் குழந்தைகளாகும் பெற்றோர்களை பிள்ளைகள் அருகிலிருந்து நேசிக்க வேண்டும்: செஞ்சொற் செல்வர் ஆதங்க வேண்டுகோள் (Video)

முதுமையில் குழந்தைகளாகும் பெற்றோர்களை பிள்ளைகள் அருகிலிருந்து நேசிக்க வேண்டும்: செஞ்சொற் செல்வர் ஆதங்க வேண்டுகோள் (Video)

இப்பொழுதெல்லாம் கல்வி வளர்ச்சியாலும், பொருளாதார வளர்ச்சியாலும், நாட்டினுடைய போர்ச் சூழலாலும் பல பிள்ளைகள் நாடு கடந்து வாழ்கிறார்கள்.  அவர்களைப் பெற்று வளர்த்து, ஆளாக்கிய தாய், தந்தையர்கள் சில வேளைகளில் தனிமையில் வாடுகின்றார்கள். உண்மையில் பெற்றோர்களின் முதுமைக் காலத்தில் அவர்களின் பிள்ளைகள் அருகிலிருந்து அவர்களை நேசிப்பது போல் சிறப்பான செயற்பாடு வேறொன்றுமில்லை. எவ்வளவு பொருள் வசதி, கல்வி வசதியிருக்கலாம். ஆனால், முதுமை என்பது, முதியோர்களின் பிரச்சினை என்பது சாதாரணமானதொன்றல்ல. அது இயற்கையான பிரச்சினையாகவிருந்த போதிலும் அவர்கள் அன்புடன் வளர்த்த பிள்ளைகள் அவர்களுக்கு அருகிலிருந்து  முதுமையில் குழந்தைகள் போன்றிருக்கின்ற பெற்றோர்களை நேசிப்பது என்பது மிக முக்கியமானதொரு விடயம். இந்த விடயத்தில் அனைவரும் அக்கறை கொள்ள வேண்டுமென சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ஆதங்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

நேற்றைய தினம்(10) அனுஷ்டிக்கப்பட்ட அன்னையர் தினத்தை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு விசேடமாககருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

எங்களுடைய தமிழர் பண்பாட்டில் தாய்மைக்கு முதலிடம் கொடுப்பதும், தாயை  உயரத்தில் வைத்து நேசிப்பதும் உன்னதமானதொரு மரபாகும். 

தற்போது உலக நாகரீகங்களின் தாக்கத்தால் தாயை நேசிக்கின்ற பண்பாடு சற்றுத் தேய்வடைந்திருந்தாலும் பெரும்பாலும் எங்கள் பண்பாட்டில் தாய்க்கு முதலிடம் கொடுத்து, தாயினுடைய  பெருமைகளை, தாய் செய்த தொண்டை நன்றியுடன் பேணுகின்ற பண்பாடு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

இந்தப் பண்பாடு தொடர வேண்டுமென இறைவனைப் பிரார்த்திப்பதுடன்  எங்கள் சமூதாயம் இந்தப் பண்பாட்டு மரபைக் காக்க வேண்டுமெனவும் இந்த வேளையில் வேண்டுகின்றேன். 

தற்போது முதியோரில்லங்கள் தேவைப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பெற்ற பிள்ளைகள் பிற நாடுகளில் வசிப்பதால் நேரடியாகப் பிள்ளைகள் பெற்றோர்களைப் பராமரிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளமையால் பல முதியவர்கள்  வீடுகளில் தனிமையிலிருக்கிறார்கள். 

இதனால், அவர்களிடம் பொருட்களைத் திருடச் செல்கின்ற திருடர்கள் ஒன்றுமறியாத முதியோர்களாகிய தாய்- தந்தையரைக் கொலையும் செய்கிறார்கள். இந்தச் சூழ்நிலை சமீப காலமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆகவே, அன்னையர் தினத்தில் பெற்ற பிள்ளைகள் தமது அன்னையரை வாழ்த்தி முகநூல்கள் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள். 

வெறுமனவே வாழ்த்துக்கள் தெரிவிப்பதுடன் நின்றுவிடாது அன்னையரை அவர்களின் முதுமைக் காலத்தில் நேசிக்க வேண்டுமெனவும் அன்புடன் வேண்டிக் கொள்கின்றேன். 

கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மூத்தோர்களுக்கு உன்னதமான முதியோர்  நிலையங்களிருந்தன. தற்போது அந்தவிடங்களில் கொரோனாச் சூழ்நிலை காரணமாக எத்தனையோ முதியோர்களைப் பெற்ற பிள்ளைகள் குறித்த நாட்டிலிருந்து கூடப் பார்க்க முடியாத கவலையிலிருப்பதை யாமறிவோம்.  இந்தச் சூழ்நிலை தொடரக் கூடாது.

எப்போதும் தமிழர் பண்பாட்டில் பெற்ற தாய், தந்தையரைப் பெற்ற பிள்ளைகள் பேணிப்  பாதுகாக்க வேண்டுமென இந்த நாளில் அன்புடன் அனைவரையும் வேண்டிக் கொள்கின்றேன்.

கடந்த-14 ஆண்டுகளாக சிவபூமி முதியோரில்லத்தை நாங்கள் நடாத்தி வருகிறோம். அங்கு பல அன்னையர்கள், தந்தையர்கள் வாழ்கிறார்கள். இங்கு பிள்ளைச் செல்வங்கள் இல்லாதவர்களும், பிள்ளைகளை இழந்தவர்களும் வாழ்கிறார்கள். அது மாத்திரமன்றிப் பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்களும் வாழ்கிறார்கள். 
 
மேலும் வெளிநாடுகளுக்குச் சென்று தங்கள் பெற்றோர்களைக் கூப்பிட முடியாத  சூழ்நிலையில் தங்கள் பிள்ளைகள் எப்போது வருவார்கள்? என்கின்ற நிலையிலிருக்கின்ற முதியோர்களையும்  நாங்கள் தினமும் சந்திக்கின்றோம். 

எனவே, பத்துமாதம் சுமந்து பாலூட்டி, சீராட்டி, தாலாட்டி வளர்த்து, அறிவு தந்து, வாழ்வு தந்து  என் பிள்ளை உயர்ந்த நிலையிலிருக்கின்றான் என்ற நிலையில் பெருமை பேசிய தாய் தன்னுடைய முதுமைக் காலத்தில் யாருமற்ற, தன் அன்பைப்  பகிர்ந்து கொள்வதற்கு ஒருவரில்லாத சூழலில் வேதனைப்படுவாளாயின் நாம் பெற்ற தாய்க்குச் செய்கின்ற நன்றிக் கடனாக அது அமையாது. 

எனவே, நன்றியுள்ளதொரு சமூகமாக எங்கள் சமூதாயம் விளங்க வேண்டுமானால் மூத்தோரைக் கடைசி வரை பிள்ளைகள் நேசிக்க வேண்டும். இதுதான் நாம் கொண்டாடும்
அன்னையர் தின நாளின் இலக்கணம் என்பதைக் கூறி  அனைத்து அன்னையர்களுக்கும் எனது இதயபூர்வமான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.   

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}                                              

RELATED ARTICLES

Most Popular