
மஹா சிவராத்தியை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(05) வடமாகாணத்திலுள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை வழங்கப்படுவதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி-சுரேன் ராகவன் அறிவித்துள்ளார்.
அத்துடன் இந்தத் தினத்தில் வடக்கிலுள்ள தனியார் கல்வி நிலையங்களும் விசேட விடுமுறையை வழங்க வேண்டுமென அவர் கேட்டுள்ளார். இறை அனுஷ்டானங்களை மேற்கொள்ளும் பொருட்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நலன் கருதி இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
இந்தத் தினத்திற்குரிய பதில் பாடசாலை நடாத்தப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, சிவராத்திரி தினத்தில் இறைவழிபாடு செய்யவென அரசால் விடுமுறை வழங்கப்பட்டுள்ள போதிலும் இந்நாளில் தனியார் கல்வி நிலையங்கள் கல்வி போதிக்க ஏற்ற நாளாகக் கருதி கற்பித்து வருகிறார்கள். இதுவொரு தவறான செயலாகுமென காரைநகர் மணிவாசகர் சபை சுட்டிக் காட்டியுள்ளது.