fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

போர் நடைபெற்ற காலங்களில் பல புத்தாக்கங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தேறின

கடந்த – 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் போர் நடைபெற்ற காலங்களில் பல புத்தாக்கங்கள் யாழ்ப்பாணத்தில் நடந்தேறின. மின்சாரமில்லாத நிலையிலிலும் ஜாம் போத்தலில் தேங்காயெண்ணை ஊற்றி அதனை விளக்காக மாற்றி எமது மாணவர்கள் படித்துச் சிறந்த பெறுபேறுகள் பெற்ற காலங்களுண்டு என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பட்டப்பின் கற்கைகள் பீட பீடாதிபதி ஜி. மிகுந்தன் பெருமிததத்துடன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஆய்வுகள் அபிவிருத்திப் பிரிவினரின் ஏற்பாட்டில் ஆய்வு தினம் நேற்று வியாழக்கிழமை(14) முற்பகல் கல்லூரியின் சபாலிங்கம் கேட்போர் கூடத்தில் முதன்முறையாக இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறந்த பெறுபேறு பெற்றவர் மாத்திரம் விஞ்ஞானியாகி விட முடியாது. நாங்கள் வழக்கமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஒன்றைக் குறிப்பிடுவோம். ஒருவேளை விஞ்ஞானி ஜஸ்டீன் இலங்கையில் பிறந்திருந்தால் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டுமல்ல இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் சட்டதிட்டங்களின் படி என்றும் அவரால் பேராசிரியராக உருவாக முடியாது. இங்குள்ள புள்ளி விபரங்களின் அடிப்படையில் வைத்து நோக்கும் போது அவரிடம் அதற்கான தகுதிகள் காணப்படாது.

அவர் தலைசிறந்த விஞ்ஞானியாக மிளிர்ந்தமைக்கு காரணம் அவரது கண்டுபிடிப்புக்களை மக்கள பயன்படுத்தினார்கள். மக்கள் அவரை இனம் கண்டார்கள். இதன்மூலம் இந்தப் பூமி முழுவதுமாகப் பயன் பெற்றது.

எங்களுடைய பகுதிகளில் புத்தாக்காங்கள் நிறையவே செய்யப்படுகின்றன. ஆன போதும் பல்வேறிடங்களிலும் அவை இனம் காணப்படவில்லை.

புத்தாக்கம் என்பது, ஆய்வு என்பது தேவை கருதி முயற்சியில் ஈடுபடுகின்றவர்களுக்கான ஒரு வாய்ப்பு. அதில் யாருமே ஈடுபடலாம். ஊக்கமும், அதற்கான ஆக்கமும் வழிகாட்டல்களாக இருந்தால் நிச்சயமாக ஒவ்வொருவரும் ஆய்வுத் துறையில் மிளிரலாம். ஒளி போன்று அனைவரும் மிளிர்வதற்கான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன.

நீங்கள் ஒவ்வொருவரும் நினைத்தால் விஞ்ஞானியாக உருவாக முடியும். ஆய்வு என்பது தினம் தினம் உங்கள் மத்தியில் நடைபெற்று வருகிறது. அதனை நீங்கள் ஒவ்வொருவரும் தட்டியெழுப்ப வேண்டும்.

நீங்கள் செய்யும் ஒவ்வொரு புத்தாக்கங்களையும் வெளியே கொண்டு வாருங்கள். அவ்வாறு வெளியே கொண்டு வரும் போது அவதானமாகவிருங்கள். தற்போதுள்ள உலகம் பிரதி பண்ணும் உலகமாகக் காணப்படுவதால் உங்கள் ஆக்கங்களை இன்னொருவர் பிரதி பண்ணாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

உங்கள் கண்டுபிடிப்புக்களைப் பதிவு செய்வதன் மூலம் இலட்சக்கணக்கான வருவாய்களைத் தேடித் தரக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.
குறிப்பாக உங்கள் கண்டுபிடிப்புக்களைத் தொழில்நுடபத் துறையில் பயன்படுத்துபவர்கள் உங்களிடம் பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்தக் கூடிய சூழலே காணப்படுகின்றது.

பணத்திற்காக செய்யப்படுவதில்லை ஆய்வுகள். தேவை கருதிய, இருக்கின்ற வளங்களை முழுமையாகப் பயன்படுத்துகின்றவளவுக்கு வாய்ப்புக்களை நீங்கள் தேடிச் சென்றால் எந்தவிடத்திலும் ஆய்வுகள் செய்யலாம். ஆறாம் தர மாணவரும் ஆய்வு செய்யலாம், க. பொ. த உயர்தரம் படித்தவரும் ஆய்வு செய்யலாம். வயது முதிர்ந்தவர் இறக்கின்ற தறுவாயிலும் ஆய்வு செய்யலாம். ஆய்வு செய்வதற்கு வயதெல்லை என்பது கிடையாது. மொத்தத்தில் நீங்களே உங்களை உருவாக்கிக் கொள்வதற்கு ஆய்வுகள் என்பது முக்கியமானது.

கடந்த மாதம் “மீள் சுழற்சி செய்யக் கூடிய சக்தி” எனும் தலைப்பிலான மாநாடு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றது. இந்த மாநாட்டில் 120 வெளிநாட்டவர்கள் பங்கு கொண்டார்கள். அதிலே 100 பேர் எமது பகுதிகளிலிருந்து புலம்பெயர்ந்து போன விஞ்ஞானிகள். நோர்வே, அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய நாடுகளில் அவர்கள் பணி புரிகின்றார்கள். அவர்கள் எங்களுடைய சொத்துக்கள். அவர்களுடைய அனுசரணை என்றும் எமக்குத் தேவை.

எங்களுடைய மாணவர்கள் ஆய்வுத் துறை சார்ந்து ஈடுபடுகின்ற போது எங்களூடாக அவர்களை அணுக முடியும். அதற்கான தொடர்புகளை எங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம். அதுமட்டுமன்றி பரிசோதனைக்குத் தேவையான ஆய்வு கூட வசதிகளையும் பெற்றுக் கொள்ள முடியும்.

பெற்றோர்கள, ஆசிரியர்கள் திணிப்பதை விட மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே இனம் கண்டு கொள்ள வேண்டும். இதன் மூலம் புத்தாக்கங்களை வெளிப்படுத்த முடியும். புத்தாக்கங்களை உருவாக்குவதற்குத் தேவையான விடயங்களைத் தேடிக் கற்றுக் கொள்ளுங்கள். இதன்முலம் எந்தத் துறை சார்ந்தும் நீங்கள் ஆய்வு செய்யலாம். மிளிரலாம். எந்தவொரு ஆசிரியரும் ஆய்வுக்குள்ளால் வர வேண்டும் என்பது என்னுடைய ஆவல்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞான சங்கம் அமைந்துள்ளது. அந்த விஞ்ஞான சங்கத்திற்கு விண்ணப்பிப்பதன் மூலம் அவர்களுடைய அனுசரணையை மாணவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மல்லாவியில் துப்பாக்கி சூடு; இளைஞன் காயம்

World News

யாழில் கொரோனாவின் பின்னரான மின்சார சபை கட்டணப் பட்டியலில் சந்தேகம்!! (Video)

TamilTwin

வித்தியா படுகொலை வழக்கு! யாழ். மேல் நீதிமன்றத்தின் உத்தரவு

World News