fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

பெண்கள் குடிப்பதால் தான் நாட்டிற்கு சீரழிவா?: யாழில் சர்வதேச ஊடகவியலாளர் துளசி கேள்வி

பெண்கள் மதுபானத்தை எவருக்கும் விற்க முடியாது. வாங்க முடியாது…என்ற சட்டம் இந்த நாட்டில் பல வருடங்களாக இருந்து வந்துள்ளது. அந்தச் சட்டம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம். ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பெண்கள் குடித்தால் நாட்டிற்குச் சீரழிவு எனத் தெரிவித்து அந்தச் சட்டம் தொடர்ந்தும் நடைமுறையிலிருப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார். குடிப்பதால் நாட்டிற்குச் சீரழிவு தான். ஆனால், பெண்கள் குடிப்பதால் தான் நாட்டிற்குச் சீரழிவு ஏற்படுகிறதா? என சர்வதேச ஊடகவியலாளரும், செயற்பாட்டாளருமான துளசி முத்துலிங்கம் கேள்வியெழுப்பியுள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பெண் விடுதலைச் சிந்தனை அமைப்பு, சமூக மேம்பாட்டுக் கழகம், சமூக மேம்பாட்டு இணையம் ஆகிய அமைப்புக்களின் ஏற்பாட்டில் விசேட பொதுக் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை(10-03-2019) பிற்பகல்-03.30 மணி முதல் யாழ். கொக்குவில் சந்தியிலுள்ள கவிஞர் முருகையன் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு விசேட உரை ஆற்றிய போதே அவர் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தினமும் மதுபானம் குடித்து விட்டு வாகனங்கள் ஓட்டும் குற்றச்சாட்டில் பல எண்ணிக்கையான ஆண்கள் பொலிஸாரால் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், அவர்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய நிலையில் கைது செய்யப்பட்டால் ஊடகங்களில் அவர்கள் தொடர்பான விபரங்கள் வெளிப்படுவதில்லை. ஆனால், பெண்கள் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது மிகவும் குறைவாகக் காணப்படுகின்ற போதும் தற்செயலாக யாராவது குடித்து விட்டு வாகனம் ஓட்டும் போது கைது செய்யப்பட்டால் கைது செய்யப்படும் பெண்ணின் பெயர், அவரது ஊர், பிள்ளைகள் தொடர்பான விபரங்கள் அனைத்தும் ஊடகங்களால் வெளியிடப்படும்.

அண்மையில் குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டிற்காகப் பெண் வைத்தியரொருவர் கைது செய்யப்பட்டார். அவர் அவ்வாறு ஓட்டியது தவறாகவிருந்த போதும் குறித்த வைத்தியர் தொடர்பான விபரங்கள் மீண்டும் மீண்டும் வெளியிடப்பட்டதன் காரணமாக அவரது உத்தியோகம் பறி போய்விட்டது. குடித்து விட்டு வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டிற்காக அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இந்த நாட்டில் எத்தனையோ ஆண் வைத்தியர்கள் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியிருக்கிறார்கள். ஆனால், பெண் என்ற காரணத்தால் குறித்த வைத்தியர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியது பூதாகாரமாக்கப்பட்டுளளது.

நான் என் வாழ்க்கையில் ஒருபோதும் மதுபானம் அருந்தியதில்லை. இது தொடர்பில் கேள்வி கேட்டமைக்காக எனது புகைப்படத்தை எடுத்து பெண்கள் குடிக்க வேண்டுமென்பதற்காக போராடுவதாகவும், தமிழ்ப் பெண்களுக்கு இருக்கிற துணிச்சலைப் பாருங்கள் எனவும் குறிப்பிட்டு முகநூல்களில் சில ஆண்கள் பதிவிட்டார்கள். முகநூல் நிறுவனத்திற்கு அறிவித்து நிறுத்தும் வரை எனக்கெதிரான பல விமரசனங்கள் முன்வைக்கப்பட்டன.

இப்படித் தான் நாங்கள் என்ன உரிமை கேட்டாலும் ஏன் அப்படிக் கேட்க வேண்டும்? சும்மா இருந்தால் என்ன? எனக் கேள்வி கேட்கும் மனநிலையே காணப்படுகின்றது.

சர்வதேச மகளிர் தினம் அண்மையில் அனுஷ்ட்டிக்கப்பட்ட நிலையில் கூட பெண்களுக்கு மட்டும் ஏன் தனியான நாள்? ஆண்களுக்கு ஏன் தனியான நாள் இல்லை என்று பலரும் வாதாடுகிறார்கள். சர்வதேச மகளிர் தினம் போன்று சர்வதேச ஆண்கள் தினம் நவம்பர்- 19 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்றது.

தங்களுக்கு ஒரு நாள் இல்லை என்ற கோபத்தால் தான் இந்த நாள் சர்வதேச ஆண்கள் தினமாக்கப்பட்டுள்ளது. இந்த நாளிருந்த போதும் இந்த நாளில் தாங்கள் கொண்டாடப்படவில்லை என்று கூறுகிறார்கள். எவ்வாறு கொண்டாடப்பட வேண்டும்? றோசாப் பூ தர வேண்டுமா? அவ்வாறெனில் நாங்கள் தருகிறோம். ஆனால், நாங்கள் சர்வதேச மகளிர் தினத்தில் றோசாப் பூ கேட்கவில்லை.

பெண்களுக்கெதிரான பல்வேறு வன்முறைகள் காணப்படும் நிலையில் அதனை வெளிக் கொண்டு வரும் முகமாகவே சர்வதேச மகளிர் தினம் கொண்டு வரப்பட்டது எனவும் தெரிவித்தார்.

Related posts

யாழில் குறைந்த லீவுகள் எடுத்த ஆசிரியர்களுக்கு சிறப்புக் கெளரவம் (Video, Photos)

TamilTwin

நல்லூரில் நாளை ‘பாரதி விழா’

TamilTwin

திறைசேரிக்கு வருமானம் முறையாக கிடைத்தால் அரச ஊழியர்களின் சலுகைகள் உறுதிப்படுத்தப்படும்

World News