fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
International womens day Tamil
ஊர்க்குருவி தமிழ்

பெண்களின் முன்னேற்றமும் எதிர்கொண்டுள்ள சவால்களும்

வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த பெண்கள் தற்போது நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையுமாய்ப் பொதுவெளியில் பல்வேறு புதுமைகளைப் படைத்து வருகிறார்கள். உலகளாவிய ரீதியில் பல்வேறு துறைகளிலும் ஒளிவீசிப் பிரகாசித்து வருகிறார்கள். இதுவரை நுழையாத பல புதிய துறைகளில் நுழைந்து விண்ணிலும், மண்ணிலும் எண்ணரிய சாதனைகளைப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பெண்களின் இத்தகைய மகத்தான உயர்வுக்கு அவர்களின் தளராத முயற்சிகளும் , தன்னம்பிக்கையுணர்வுமே காரணமாகும்.

உடலுறுதி கொண்ட ஆணைவிட மனவுறுதி கொண்ட பெண் சிறப்புமிக்கவள். தாயாக, தாரமாக, மகளாக, சகோதரியாக, தோழியாக உறவுகளுக்கிடையே நீக்கமற நிறைந்திருப்பவர்கள் பெண்கள். பெண்களை எங்கள் கண்கள் போல் காக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரினதும் கடமையாகும்.

ஆண்டுதோறும் மார்ச் மாதம்-08 ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மகளிர் தின கருப்பொருள் “பெண்களுக்கு எதிரான வன்முறையை தக்க நேரத்தில் முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென வாக்குறுதி கொள்வோம்” என்பதாகும்.

சர்வதேச மகளிர் தினம் உருவான வரலாறு

கடந்த-1789 ஆம் ஆண்டு யூன்-14 ஆம் திகதி ஆணுக்கு நிகராக பெண்கள் இந்த சமூதாயத்தில் உரிமைகள் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சுதந்திரத்துவம், சமத்துவம், பிரதிநிதித்துவம் என்ற கோரிக்கைகளை முன் வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பரிஸிலுள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தினர்.

International Women's Day

வேலைக்கு ஏற்ற ஊதியம், எட்டு மணி நேர வேலை, பெண்களுக்கு வாக்குரிமை, பெண்கள் அடிமைகளாக நடாத்தப்படுவதிலிருந்து விடுதலை வேண்டும் ஆகிய கோரிக்கைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

பெண்களின் போராட்டத்தை நசுக்க நினைத்த மன்னர் லூயிஸ் பிலீப் போராட்டத்தின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் போராட்டக்காரர்களைச் சமாதானப்படுத்த முயன்ற போதும் அது பலனளிக்கவில்லை. இதனால், தனது மன்னர் பதவியை இழந்தான்.

பிரான்ஸ் நாட்டில் பெண்கள் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றியின் மூலம் ஐரோப்பா முழுக்க பெண்களின் போராட்டம் உத்வேகத்துடன் இடம்பெற வித்தாக அமைந்தது. ஜேர்மனி, அவுஸ்திரேலியா, டென்மார்க் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்களின் தொடர் போராட்டங்களைக் கண்டு அரசு ஆடிப்போனது.

சமகாலத்தில் இத்தாலியிலும் பெண்கள் தங்களுக்கு வாக்குரிமை கேட்டுப் போராட ஆரம்பித்தனர்.

பிரான்ஸ் நாட்டில் புருஸ்லியனில் இரண்டாவது குடியரசை நிறுவிய லூயிஸ் ப்ளாங்க் 1848 ஆம் ஆண்டு மார்ச் மாதம்-08 ஆம் திகதி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கவும், அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடமளிக்கவும் ஒப்புதல் வழங்கினார்.

உலகப் பெண்களின் போராட்டங்களுக்கு வெற்றி கிடைத்த அந்த நாளே மகளிர் தினமாக உருவாகனது.

1910 ஆம் ஆண்டு ஓப்பன் ஹேகனில் கிளாரா ஜெட்கின் தலைமையில் அனைத்துலகப் பெண்கள் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதன்பின் சர்வதேச மாதர் அமைப்பு உருவானது. இந்த அமைப்பின் சார்பாக 1911 ஆம் ஆண்டு மார்ச் மாதம்-19 ஆம் திகதி டென்மார்க், அவுஸ்திரேலியா, ஜேர்மனி மற்றும் இன்னும் சில ஐரோப்பிய நாடுகளின் பெண் பிரதிநிதிகள் முதலாவது சர்வதேச மாதர் தினத்தைக் கொண்டாடினர்.

குறித்த கொண்டாட்டத்தின் போது தான் வருடம் தோறும் மார்ச் மாதம்-08 ஆம் திகதியை சர்வதேச மாதர் தினமாக கொண்டாட வேண்டுமென முடிவு செய்யப்பட்டது.

கடந்த- 1975 ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினத்தை ஐக்கியநாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்நாளே இன்றைய தினம் சர்வதேச மகளிர் தினமாக உலகளாவிய ரீதியில் கடைப்பிடிக்கப்படுகிறது.

தற்போது ரஷ்யா, உக்ரைன், உஸ்பெஸ்கிஸ்தான், வியட்நாம், ஆப்கானிஸ்தான், கம்போடியா, கியூபா, ஆர்மேனியா, அஜர்பைஜான், பெலாரஸ், புர்கினியா பெசோ, எரித்திரியா, கஜகஸ்தான், மால்டோவா, மங்கோலியா, மான்டேநெக்ரோ, தஜிகிஸ்தான், துருக்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி விடுமுறை வழங்கப்படுகின்றன.

இலங்கையில் பெண்களும் எதிர்கொண்டுள்ள சவால்களும்

உலகிலேயே பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கை 17 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

நாட்டின் மொத்த சனத் தொகையில் 52 சதவீதமானவர்கள் பெண்களாகவே காணப்படுகின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை ஆண், பெண் பேதமின்றி அனைத்துச் சிறுவர்களுக்குமான தரமான கல்வியும், சமமான தொழில் வாய்ப்புக்களும் கிடைத்துக் கொண்டு தானிருக்கின்றன. அதேபோன்று அனைத்துத் தொழில் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அரச, தனியார் சேவை வழங்களில் எவ்வித பாகுபாடோ, பின்னடைவோ இன்றி மகளிர் மேம்பாட்டு நலத் திட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இருந்த போதிலும் இலங்கையிலுள்ள பெண்களும் பல்வேறு தடங்கல்களையும், முட்டுக்கட்டைகளையும் எதிர் கொண்ட வண்ணம் தானுள்ளனர்.

கல்விச் சூழலில் பெண்களின் கால்த்தடம் மிகத் திடமாகவிருந்த போதும் முடிவெடுக்கும் அரசியல் துறையில் பெண்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது.

ஆசிரியர்த் தொழிலைப் பொறுத்தவரை 80 வீதமானவர்கள் பெண்களாக விளங்கிய போதிலும் 20 வீதத்திற்கும் குறைவான பெண் அதிபர்களின் பங்களிப்பே காணப்படுகிறது.

தொழிலாளர் சம்பந்தமான உரிமைகள், ஊதியத்திலுள்ள பாகுபாடுகள் என்பன மிகப் பாரிய பிரச்சினைகளாக காணப்படுகின்றன. அத்துடன் பொருளாதார ரீதியாக ஆண்களில் தங்கியிருக்கும் பெரும் எண்ணிக்கையான பெண்களும் இருந்து கொண்டு தானிருக்கின்றனர்.

இலங்கையைப் பொறுத்தவரை பெண்கள் வன்முறைக்குள்ளாகுவதும் தொடர்ந்த வண்ணமேயிருக்கிறது. குடும்ப வன்முறைகள் காரணமாக அதிகளவான பெண்கள் பாதிக்கப்பட்டுக் கொண்டு தானிருக்கின்றனர். அதுமட்டுமன்றி சமூகத்திலும், தொழில் செய்யுமிடங்களிலும் பெண்களுக்கெதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன.

வட- கிழக்கு மாகாணங்களில் கடந்த கால யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான இளம் பெண்கள் உட்பட பெண்கள் விதவைகளாக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான பெண்கள் தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதிலும், பொருளாதார வளத்தைப் பெற்றுக் கொள்வதிலும் பாரிய சவால்களை எதிர்கொண்டு வருகிறார்கள்.

பால்நிலை சமத்துவத்தை எட்டுவதற்கும், பெண்களை வலுவூட்டுவதற்குமான எமது செயற்பாடுகள் முடிவுறாதவை என ஐக்கியநாடுகள் சபையின் பொதுச் செயலாளர் கருத்தொன்றை வெளியிட்டிருந்தார். இந்தக் கருத்தில் உள்ளடங்கியுள்ள உண்மையான அர்த்தத்தை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எங்கள் மனங்களிலுள்ள பால்நிலை சம்பந்தமான விம்பங்களை உடைத்தெறிவதன் மூலமே பெண்களுக்கெதிரான வன்முறைகளுக்கு முடிவு கட்ட முடியும். தடைகள் பல தாண்டி சாதனை படைத்து வரும் பெண்கள் எதிர்கொண்டுள்ள அனைத்துச் சவால்களையும் முறியடிக்க எம்மில் ஒருத்தியான பெண்களுடன் நாங்களும் கரம் கோப்போம். எந்நாளும் அவர்களுக்குத் துணையாவோம்.

சிறப்புக் கட்டுரையாக்கம்:- செல்வநாயகம் ரவிசாந்

Related posts

39 ஆண்டுகள் கடந்தாலும் தமிழ்மக்கள் மத்தியில் அழியாத வடுவை ஏற்படுத்தியுள்ள யாழ்.நூலக எரிப்பு!!

TamilTwin

புது வசந்தம் பிறந்திடவே தீபாவளி வருகவே… !

N N

“அன்னையே நீ நீடு வாழ்க!” (அன்னையர் தின சிறப்புக் கவிதை)

TamilTwin