fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

திலீபன் நினைவு நிகழ்விற்கு வழிவிடத் தவறினால் இதுதான் நிலைமை: அரசாங்கத்திற்கு எச்சரிக்கை! (Video, Photo)

தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டும். திலீபன் நினைவு நிகழ்விற்கு வழிவிடத் தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள் எனவும் காரைதீவுப் பிரதேச சபையின் தவிசாளர் கே.ஜெயசிறில் தெரிவித்தார்.

அம்பாறை காரைதீவுப் பிரதேச சபையின் பொதுநூலக கேட்போர் கூடத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(20) இடம்பெற்ற திலீபன் நினைவு தினம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி மற்றும் தற்போதைய பிரதமர் தமிழர்களுக்கு அநீதி இழைக்க மாட்டோம் எனத் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.உண்மையில் இவர்களின் இக் கூற்றுகள் வரவேற்கப்படவேண்டியவையாகும்.

இவர்கள் இதே போன்று இலங்கையில் ஒரு நீதி ஒரு சட்டம் என வலியுறுத்தி வருகின்றனர். இதனடிப்படையில் வட- கிழக்குத் தமிழர்களின் மனநிலையினை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன்.

எமது சுதந்திரத்திற்காகவும், தமிழர்களின் விடுதலைக்காகவும் பாடுபட்டு மறைந்த மாமனிதர் திலீபன் ஆவார். தியாகியாகிய தீலீபன் பயங்கரவாதியாகவோ அல்லது ஆயுததாரியாகவோ இல்லாமல் சாத்வீகப் போராட்டத்தை முன்னெடுத்தவராவார்.

தமிழர்களின் வரலாற்றில் இடம் பிடித்திருக்கும் இவரின் நினைவு தினத்தை தமிழர்கள் வாழும் இடங்களில் அனுஷ்டித்து வருகின்றார்கள். ஆனால், இப்போதைய அரசாங்கம் இந்நினைவு நிகழ்வை மேற்கொள்ளத் தடை விதித்துள்ளது. இது அடக்குமுறை, சர்வதிகாரப் போக்கு என்பவற்றைக் காட்டுகின்றது. இவ்விடயம் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் பல கடிதங்களை ஜனாதிபதி, பிரதமருக்கு அனுப்பியிருக்கின்றது.

எனவே, எனது வேண்டுகோள் யாதெனில் நாட்டில் சட்டம் நீதி எல்லோருக்கும் சமனாயின் இந்நிகழ்விற்கு அனுமதி தரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.

இந்நாட்டிற்காகப் போராடிய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி நிகழ்வுகளை மேற்கொள்ள முடிந்தால் அது உங்களது உரிமை. ஆயுதம் ஏந்தாது அகிம்சை ரீதியாகப் போராடி இறந்த திலீபனை நினைவு கூறுவது என்பது எங்களது உரிமை. எங்களது இவ்விடயத்தைப் புறக்கணிக்காது தமிழர்களின் உணர்வினை அரசாங்கம் மதித்துச் செயற்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றேன்.

இந்த நிகழ்விற்கு வழிவிடத் தவறினால் ஏதோ ஒரு வழிமுறையில் ஒவ்வொரு தமிழனும் உணர்வினை வெளிப்படுத்துவார்கள்.உங்களோடு சேர்ந்து வாழ விரும்பும் தமிழர்களின் உரிமை விடயத்தில் சர்வதிகாரப் போக்குடன் நடந்து கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டால் சட்டதிட்டத்திற்கு அமைய இந்நிகழ்வினை எம்மால் நிறைவேற்ற முடியும் எனக் கூற விரும்புகின்றேன் எனவும் கூறினார்.

{பாறுக் ஷிஹான்}

Related posts

‘தற்கொலைகள் எதற்கும் தீர்வாகாது’: யாழ்.நகரில் கவனயீர்ப்பும், விழிப்புணர்வும் (Video, Photos)

TamilTwin

போலிகளை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை

World News

புத்தாண்டு தினத்தில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தெரியுமா? இந்தியா முதலிடம்

World News