யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டுக் கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண்ணொருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை(01) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த குறித்த இளம்பெண் எதிர்வரும்-10 ஆம் திகதி திருமண பந்தத்தில் இணையவிருந்தார். திருமணத்துக்கான ஏற்பாடுகள் துரித கதியில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இந்நிலையில் திடீரெனத் தலையில் ஏற்பட்ட வலியைத் தொடர்ந்து மயக்கமடைந்த குறித்த இளம் பெண்ணை அவரது உறவினர்கள் மடு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்தியசாலையில் நடாத்தப்பட்ட வைத்தியப் பரிசோதனையில் அவருக்குத் தலையில் கட்டியொன்று காணப்படுவது கண்டறியப்படடது. இதனையடுத்து வைத்தியர்கள் அவருக்கு சத்திரசிகிச்சை மேற்கொண்டனர். சத்திர சிகிச்சையையடுத்து குறித்த பெண் கோமா நிலைக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் நேற்று(01) பிற்பகல் சிகிச்சை பலனளிக்காது அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (வயது-28) என்ற இளம் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இதேவேளை, மட்டக்களப்பு சுவாமி விபுலாநந்தா அழகியல் கற்கைகள் நிறுவனத்தில் கல்வி பயின்ற இவர் கடந்த வருடம் பட்டம் பெற்று வெளியேறியிருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.