ஈழத்துச் சித்தர் பரம்பரையில் முன்னோடிகளில் ஒருவராகத் திகழும் யாழ்ப்பாணத்து மாமுனிவர் தவத்திரு சிவயோக சுவாமிகளின் 55 ஆவது குருபூசை நிகழ்வு இன்று திங்கட்கிழமை(18) யாழில் சிறப்பாக இடம்பெற்றது.
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத் தேரடிக்கு அருகாமையில் அமைந்துள்ள வில்வமரத்தடியில் சிவயோகசுவாமிகளின் உருவப்படம் வைக்கப்பட்டு இன்று காலை- 07 மணியளவில் விசேட பூசைகள் இடம்பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை ஆரம்பமானது. கூட்டுப் பிரார்த்தனையைத் தொடர்ந்து நல்லூர்த் தேரடியிலிருந்து காலை -08 மணியளவில் பாதயாத்திரை ஆரம்பமானது.
சிவயோக சுவாமிகளின் அலங்கரிக்கப்பட்ட உருவப்படம் தாங்கிய இந்தப் பாத யாத்திரையில் அமெரிக்காவிலிருந்து வருகை தந்துள்ள ஹவாய் ஆதீன குரு மஹா சந்நிதானம் சற்குரு போதிநாத வேலன் சுவாமிகள் மற்றும் ஐந்து துறவியர்கள், உலகின் பல பாகங்களையும் சேர்ந்த 50 அடியவர்கள், அமெரிக்க ஹவாய் ஆதீனத்தைச் சேர்ந்த ரிஷி தொண்டுநாத சுவாமிகள், சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன், கொழும்புத்துறை இந்து மகாவித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள், சிவயோக சுவாமிகளின் அடியவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
குறித்த பாதயாத்திரை காலை- 09.45 மணியளவில் யாழ். கொழும்புத் துறையிலுள்ள சிவயோக சுவாமிகளின் ஆச்சிரமத்தைச் சென்றடைந்ததைத் தொடர்ந்து அங்கு சிவயோக சுவாமிகள் அருளிய நற்சிந்தனைப் பாராயணமும், பூசை வழிபாடுகளும் நடைபெற்றது.




