தமிழ்- சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் நன்மை கருதி யாழ்.நகரில் அமைந்துள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும்- 01 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை நாள்தோறும் திறந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு வர்த்தக நிலைய உரிமையாளர்களை யாழ்.வணிகர் கழகத் தலைவர் இ.ஜனக்குமார் கேட்டுள்ளார்.
இதுதொடர்பாக இன்றைய தினம்(27) விசேடமாகக் கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,
மேற்படி இரண்டு வார காலப் பகுதிகளிலும் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்வதற்கு வசதியாக ஞாயிறு மற்றும் அரச விடுமுறை நாட்களிலும் யாழ்.நகரத்திலுள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் திறந்திருக்கும்.
பொதுமக்களின் தேவைகளைக் கருத்தில் கொண்டு யாழ்.நகரில் அமைந்துள்ள நவீன சந்தை உட்புற வர்த்தக நிலையங்களையும் திறந்துவிடுமாறு நாம் யாழ். மாநகர சபை முதல்வரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
எனவே, இக் காலப் பகுதியில் பொதுமக்கள் தமக்குத் தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.