fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
விழிப்புணர்ச்சி
ஊர்க்குருவி

சமுகமும் பெண்களும்…..

பெண்கள் என்றும் பேதைகளல்ல
போகப் பொருட்களோ காட்சி பொம்மைகளோ அல்ல.
நாளைய சமுதாயத்தின் நற்பிரஜைகளை சுமப்பதற்கும் பிரசவிப்பதற்கும் உருவாக்குவதற்குமென படைக்கப்பட்ட உத்தம படைப்புக்கள். அவ்வாறே ஆண் என்பவன் அவர்களை பாதுகாப்பதற்கும் எதிர்கால சந்ததிகளின் ஆணிவேராவதற்கும் உருவாக்கப்பட்டவனே தவிர கூட்டுச் சேர்ந்து துகிலுரிக்கும் துச்சாதனர்களோ மதுவுக்கும் மாதுவுக்கும் கஞ்சாவுக்கும் அடிமையாகி எம் சமுதாயத்தை குப்பைக் காடாக்கும் காமுகர்களோ அல்ல.

பெண்களே உங்கள் சிந்தனைகளை சீர்ப்படுத்துங்கள்.
அறியாமை நீக்கி அறிவுப் பசிக்கு உரமிடுங்கள் அப்பாவித்தனத்திற்கு விடைகொடுங்கள்.
புத்தியை கூர்மைப்படுத்துங்கள், அன்பு மொழிபேசி ஆசைகாட்டி மோசம் செய்ய இது ஒன்றும் கற்காலமல்ல, உங்கள் அப்பாவித்தனத்தையும் வலுவின்மையையும் இயலாமையையும் பயன்படுத்த காலம் தன் அகலக்கதவுகளை திறந்தே வைத்திருக்கிறது அதேவேளை உங்களைத் தற்காத்துக்கொள்ளும் வழிகளும் இங்கே திறக்கப்பட்டே இருக்கின்றன.

சிறுபிள்ளைகளுக்கும் கூட சிலவற்றை கற்றுக்கொடுக்க வேண்டிய சீர்கெட்ட காலமிது.
உங்கள் பாதுகாப்பிற்கு முதல் உத்தரவாதம் நீங்களேதான் முத்துக்கள் விளையும் கடலில் தான் கிளிஞ்சல்களும் கிடக்கின்றன. ஏராளம் கிளிஞ்சல்கள் மத்தியில் தான் விலைமதிப்பற்ற முத்தும் பிரகாசிக்கின்றது. நீரைப்பிரித்து பாலை அருந்தும் அன்னம் போல உங்களைச்சுற்றி வட்டமிடும் கழுகுகளை தவிர்த்து விடுங்கள். ஆழ்கடலில் மூழ்குவது போல் அறிவுக்கடலில் மூழ்கி உங்கள் துணையெனும் முத்தை தேர்ந்தெடுங்கள். நீங்கள் எதை தேர்ந்து கொள்கிறீர்களோ அதுவே உங்கள் வாழ்க்கையாகிறது.

ஆணாயினும் சரி பெண்ணாயினும் சரி உங்கள் உடல் என்பது இறைவன் உறையும் ஆலயம் அதை பரிசுத்தமாக பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

பெற்றோரே உங்கள் பிள்ளைகளுக்கு வாழ்வை கற்றுக் கொடுங்கள். பிரச்சினைகளை சவால்களை எதிர்கொள்ளும் நுணுக்கங்களை கற்றுக்கொடுங்கள். பெண் என்றால் பதுமையல்ல சந்தர்ப்பத்தில் பாயும் புலியாகவும் வேண்டுமென கற்றுக்கொடுங்கள். ஆண் பெண் என்ற பேதங்களையும் பிரிவிகைளையும் தாண்டி ஆணும் பெண்ணும் ஒருவரையொருவர் மதித்து போற்றி பாதுகாக்க கடமைப்பட்டவர்கள் என கற்றுக்கொடுங்கள். ஒரு சமுக உருவாக்கத்தில் இருவரின் பங்களிப்பும் காத்திரமானது என கற்றுக்கொடுங்கள். ஏனைனில் பல பெண் தலைமைத்துவ குடும்பங்களையும், சில சாதனைப் பெண்களையும், பெண் துணை இழந்த ஆண்களையும் கொண்ட கலவையே எமது சமுகம்.

இன்னும் பல வித்தியாக்களும், நித்தியாக்களும், ரெஜினாக்களும் உருவாக வேண்டுமா? புட்டிப்பாலுக்குப் பதில் கள்ளிப்பால் பருக்கிய ஒரு காலம் மீண்டும் உருவாக வேண்டுமா? மதுவுக்கும் மாதுவுக்கும் கஞ்சாவுக்கும் வாள்வெட்டுக்கும் அடிமைப்பட நாமென்ன அடிமாட்டுச் சந்தையில் விலை போனவர்களா? பெண்மைக்கு மேன்மையளித்த மரபில் பிறந்தவர் நாமென்று மார்தட்டிய பண்பெங்கே? பெண் என்பவள் பேதையா? இதுதான் உலக நீதியா? கிரிசாந்திகளுக்காகவும், இசைப்பிரியாக்களுக்காகவும் ஓலமிட்டவர்களே இன்று நித்தியாக்களையும் போதநாயகிகளையும் உருவாக்கலாமா?

எங்கே செல்கிறோம் நாம்? சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!. இனியொரு விதிசெய்வோம் அதை சமத்துவமானதாய் கொள்வோம் ஆண் என்றும் பெண் என்றும் இல்லை. இங்கு ஒவ்வொரு மனித வலுவும் மகத்துவம் வாய்ந்தது நாம் தொடவேண்டிய சிகரங்கள் நோக்கி உங்கள் நடையை எட்டிப் போடுங்கள். கற்பழிப்புக்களையும் காமுகர்களையுமே கவனித்துக் கொண்டிருந்தால் எங்கள் சமுகம் எழுவது எப்போது? திருடர்களாய் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. ஆரோக்கியமான சமுதாயத்தை அபிவிருத்திமிக்க இலங்கையை கட்டியெழுப்ப உங்கள் சக்திகளை பயன்படுத்துங்கள். இங்கு சட்டங்கள் திருத்தப்பட வேண்டும், சமுகம் மாற்றம்பெற வேண்டும், அனைத்தும் குடும்பங்களிலிருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.

Related posts

பெண்களின் முன்னேற்றமும் எதிர்கொண்டுள்ள சவால்களும்

TamilTwin

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு தமிழ்மக்கள் பேரவை பதிலடி!! (Video)

TamilTwin