fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Jaffna university student protest
இலங்கைச் செய்திகள்

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியிலும் யாழ். பல்கலை மாணவர்களின் மக்கள் எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கானோர் அணிதிரள்வு

இலங்கைக்கு கால அவகாசம் வழங்க வேண்டாம், தமிழின அழிப்பிற்கு சர்வதேச விசாரணை வேண்டும், இலங்கையைப் பொதுச் சபைக்குப் பாரப்படுத்த வேண்டும் ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மானவர்க்ளின் ஏற்பாட்டில் முன்னெடுத்த மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி இன்று சனிக்கிழமை(16) முற்பகல்- 10.30 மணியளவில் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பமாகியது.

குறித்த பேரணியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர், மும்மதங்களையும் சேர்ந்த மதகுருமார்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியற் கைதிகளின் உறவினர்கள், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ்மக்கள் கூட்டணி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, ஈ.பி. ஆர்.எல்.எவ் உள்ளிட்ட கட்சிகளின் அரசியல்வாதிகள், பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பல்லாயிரக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த எழுச்சிப் பேரணியில் கலந்து கொண்டவர்கள் இலங்கை அரசாங்கத்தின் இன அழிப்பிற்கெதிராக பல்வேறு கோஷங்களை எழுப்பியதுடன் இன அழிப்புத் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டுமெனவும் வலியுறுத்தினர்.

யுத்த காலத்தில் இராணுவத்தினராலும், துணை இராணுவக் குழுக்களாலும வீதிகளிலும், வீடுகளிலும் கைது செய்யப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்கள், யுத்த முடிவில் இராணுவத்தினரிடம் சரணடைந்தும், கையளிக்கப்பட்ட பின்னரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நடந்தது என்ன? என்பதை வெளிப்படுத்துமாறும், அரசியல் கைதிகளை நிபந்தனையின்றி விடுதலை செய்யுமாறும் இதன் போதும் வலியுறுத்தப்பட்டது.

மேலும் யுத்த காலத்தின் போது ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் குடியிருப்புக்களும், விவசாய நிலங்களும் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டுமெனவும், வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் இடம்பெறும் சிங்கள பெளத்த மயமாக்கல் தடுத்து நிறுத்தப்பட வேண்டுமெனவும் இதன் போது குரலெழுப்பப்பட்டது.

பேரணியில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தும் சுலோகங்களையும் தமது கைகளில் தாங்கியிருந்தனர்.அத்துடன் மக்கள் எழுச்சிப் பேரணியின் ஒருகட்டமாகப் பேரணி தொடர்பாகப் பொதுமக்களை விழிப்புணர்வூட்டும் துண்டுப் பிரசுரங்களும் மாணவர்களால் விநியோகிக்கப்பட்டன.

குறித்த எழுச்சிப் பேரணி பலாலி வீதி, கந்தர்மடம் சந்தி, இந்து மகளிர் கல்லூரி வீதி, பிறவுண் வீதி, நாவலர் வீதி, மின்சார நிலைய வீதி, யாழ். நகரம், வைத்தியசாலை வீதி, மணிக்கூட்டுக் கோபுர வீதி ஊடாக யாழ்.மாநகர சபை மைதானத்தை (சுப்பிரமணியம் பூங்கா முன்பாக) பிற்பகல்- 01 மணியளவில் சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து கடந்த-2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் நடந்த இன அழிப்பை நினைவூட்டும் கவிதையொன்று பல்கலைக்கழக மாணவரால் வாசிக்கப்பட்டது. குறித்த கவிதை வரிகளில் உள்ளடக்கப்பட்டுள்ள வார்த்தைகள் ஆழமானதாகவும், உணர்வுபூர்வமாகவும் இருந்தமையால் வேதனை தாள முடியாமல் அங்கு நின்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்கள் கண்ணீர் விட்டுக் கதறி அழுத காட்சி அங்கு திரண்டிருந்தோரை உருக்கும் வகையில் இருந்தது.

தொடர்ந்து யாழ்.மாநகர சபை மைதானத்தில் தெளிவூட்டல் உரை மற்றும் பிரகடன அறிக்கை என்பன வாசிக்கப்பட்டது.

இதேவேளை, யாழ்.குடாநாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமுடனான காலநிலைக்கு மத்தியிலும் சிறுவர்கள், பெண்கள், மூத்தோர்கள், இளைஞர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இன்றைய எழுச்சிப் பேரணியில் வயது வித்தியாசமின்றி திரண்டு கலந்து கொண்டமை முக்கிய அம்சமாகும்.செய்தித் தொகுப்பு :- செ.ரவிசாந்

Related posts

வரும் 24 மணி நேரத்தில் ஊரடங்குச் சட்டத்தை கடுமையாக்கி சிறப்பு பொலிஸ் நடவடிக்கை

World News

கோத்தபாயவின் இந்து நாளிதழ் பேட்டிக்கு ஸ்டாலின் கண்டனம்

World News

இராணுவதளபதிக்கு எதிரான தடை நீதி குறித்த கொள்கைகளிற்கு முரணானது! அமெரிக்காவிற்கான இலங்கைதூதுவர்

World News