கோடை துவங்கிவிட்டால், வியர்க்குரு, சருமப் பிரச்சினை, வயிற்றுப் பிரச்சினை, உடல் சூடு என கோடைக்கால உபாதைகள் வரிசை கட்டுகின்றன. வழியெங்கும் நீர், மோர் பந்தல், இளநீர், ஜூஸ், லஸ்ஸி, லெமன் சோடாவிற்கும் தள்ளுவண்டி கடைகள், வெள்ளரிக்காய், தர்பூசணி, கிர்ணிப்பழம் என திடீர் கடைகள் முளைக்கின்றன. இவற்றில் கோடைக்கு ஏற்றது எது?
அந்தந்த பருவ காலங்களில் கிடைக்கும் சீசனில் எந்த உணவுகள் சிறந்தவை? உடல் உபாதைகளை ஏற்படுத்தாமலும், உடல் உபாதைகளுக்கு தீர்வாகவும் இருப்பவை எது என்ற கேள்வி எழுகிறது. கோடை காலத்துக்கு ஏற்றது, நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி.
கொழுப்பு சத்தே இல்லாதது. வைட்டமின் ‘’ஏ’’ மற்றும் ‘’இ’’ நிறைந்த தர்பூசணியின் பலன்கள் ஏராளம்.

தர்பூசணியில் 90 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பி இருக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் உடல் வறட்சியை இது தடுக்கிறது. தர்பூசணியில் உள்ள பொட்டாசியம், சிறுநீரகத்தில் இருக்கும் நச்சுகளை நீக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள், தர்பூசணி சாப்பிடலாம் என சிலர் கூறுவதுண்டு. ஆனால், அது தவறு. GI எனப்படும் சத்து ஒவ்வொரு பழத்துக்கும், ஒவ்வொரு மாதிரியாக இருக்கும்.
தர்பூசணியில் அது அதிகமாக இருக்கிறது. சர்க்கரை நோயாளிகள் தர்பூசணியை அதிகமாக சாப்பிட்டால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கச் செய்யும்.