fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Uravukal True Tamil Story
சிறுகதை

உறவுகள்

காலை பதினொரு மணியாகிவிட்டிருந்தது. காற்று சுழன்று சுழன்றுவீசிக்கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை.மரக்கறிச் சமையல். நேரத்துக்கு வேலைகள்எல்லாம் முடிந்துவிட்டன. வழமையாக வெள்ளிக்கிழமையென்றால் மலர்கோயிலுக்குப் போவாள். வீடெல்லாம்துடைத்துக் கழுவி, சாம்பிராணிப் புகைப்போட்டு… ஏனைய நாட்களில் வேலை செய்யுமிடத்திலேயே மதிய உணவை முடித்துக்கொள்ளுவாள் விக்கி – அவள் புருஷன் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுப் போவான்.இப்போ அவனையும் இழந்து… அந்தஇனிமைகளையும் இழந்து… பிறந்த ஊர்என்று வந்து…

ஊருக்கு வந்த புதிதிலும் ஓரிரு தடவைகோயிலுக்குப் போனாள் எல்லோரும் அவளை விடுப்பாகப் பார்த்த மாதிரித்தோன்றியது. அந்தப் பார்வைகளைஅலட்சியம் செய்துவிட்டுப் தொடர்ந்தும் போனாள். ஒரு வெள்ளிக்கிழமை அர்ச்சனை செய்துவிட்டுப் உள்வீதியை வலம் வந்து, வாசலில்விழுந்து கும்பிட்டு நிமிர்ந்தபோது ‘மலர்…
உன்ர காதான் கழுத்தான்எல்லாம் எங்க?’…

ராசம் மாமி கையைப்பிடித்தாள்.
’அ… அதெல்லாம்தான் மாமி… இடப்பெயர்விலை அறவிலைக்கு வித்துவித்துத்திண்டது…’
‘அப்ப… காதில கழுத்துல ஒண்டும்இல்லாத நீ… ஏன் கோயிலுக்கு வாறனி? உன்னால இனசனம் எண்டிருக்கிற எங்களுக்கெல்ல வெக்கமாக்கிடக்கு..’ மலர் நடுங்கிப்போனாள். ஓட்டமும்நடையுமாக வீட்டுக்கு வந்தாள்.
அவள் கதவை திறப்பதற்குள் அழுகைமுந்திக்கொண்டது.

சுவரில் தலையைமுட்டி முட்டி அழுதாள். கடல் நிரம்பிவழியும் அளவுக்கு அழுதாள்.
”அம்மா ஏனம்மா அழுறியள்…”……”அழாதேங்கோம்மா அப்பா எப்படியும்வந்திடுவர்… அவருக்கு ஒண்டும் நடந்திராது…’ மூத்தவள் பல தடவை உலுப்பியப்பிறகுதான் அழுகை நின்றது. ’என்ர பிள்ளையள் மேல சத்தியமா…உன்ர வாசலுக்கு இனி வரமாட்டன்…என்ர விக்கிய நீ என்ர வீட்டு வாசலிலைகொண்டு வந்து விடு…’

மூத்தவள் சுஜியின் தலையைத்தொட்டுகடவுளுக்கு சத்தியம் செய்தாள். அதன் பிறகு ஒரு கோயிலுக்கும் போறதில்லை. ஊரே கூடித் திருவிழா, தேர், தீர்த்தம் என்று கூடிய போதுகூட அவள் மனதைக்கல்லாக்கிக் கொண்டு வீட்டுக்குக்குள்ளேயேகிடந்தாள்.

‘மலர் என்ன கோயிலடிப்பக்கம்வாறேல்லை…’கேள்விக்குப் புன்னகைப்பாள். ”அப்பா பேசாம எங்களோடவந்திருக்கலாம்… ஒவ்பிஸ் சாமான் ஏத்தவேவேணும் எண்டு விசுவாசம் காட்டிப்போனதாலைதானே இப்பிடி ஒருநிலை…’

மூத்தவள் சில வேளைகளில் சொல்வாள். அவளுக்கு இப்போ கொஞ்சம் விபரங்கள் புரிய ஆரம்பித்திருந்தது.

‘‘அவர அப்பிடிச் சொல்லாத, அங்க வேலை செய்து அவர் உழைச்சகாசில தானே வளந்தனீங்ள்…’’
ரஜி அமைதியாகி விடுவாள். பள்ளிக்கூட மைதானத்துக்கு விளையாட்டுப் பார்க்கவென, மாலை நேரங்களில் போகும் சின்னவன் சதீஸ் இடையில் ஓடிவந்து அவளைக் கட்டிப்பிடிப்பான். ‘‘அம்மா… எங்கட அப்பா எப்பம்மாவருவார்…?’’

அந்தக் கெஞ்சல் மொழியிலும், விழிகளிலும் இருக்கும் அப்பாத் தாகத்தைப்பார்க்கும்போது மலருக்கும் இதயம்வெடிப்பது மாதிரி இருக்கும். எதுவுமே பேசாமல் அவளின் முதுகைத்தடவி உச்சியில் முத்தமிட்டு விடுவாள். தொடர்ந்தும் விளையாட்டுப் பார்க்கஓடி விடுவான்.

கடைக்குட்டி சுஜி… ஊருக்கு வந்துதான்பாடசாலையில் சேர்ந்தாள். வீட்டில் நின்றால், ‘‘அம்மா…அப்பா வந்திட்டாரம்மா… கதவைத்திறவுங்கோ…’’ என்று அவளுக்கு அடிக்கடிவேடிக்கை காட்டும்.

விளையாட்டுக்கும் வேதனைக்கும் அர்த்தம் தெரியாது. நேரத்தைப் பார்த்தாள் மலர். பதினொன்றுபத்து. பன்னிரண்டு மணிக்கு சுஜியைக்கூட்டிவரப் போகவேண்டும். அவளைப் பொறுத்தவரை சுஜியைக்கூட்டிப்போய் வருவது பெரிய பாடாகஇருந்தது…

வழியிற் சில அந்நிய முகங்கள் விசிலடிப்பதும், ஊத்தைப் பாட்டுகளைசுருதிதப்பிப் பாடுவதும்…

‘இந்த அவமானங்களையெல்லாம்சகிக்கத்தானே சபிக்கப்பட்டிருக்கிறோம்…’என்று தாங்கிக் கொள்வாள். இரண்டு நாட்களுக்கு முன் நிவாரணக்கடைக்குப் போயிருந்தாள். மனேச்சர் பேரின்பம் அப்பாவுக்கு நண்பர். அந்தப்பழக்கத்தில் கேட்டார்…

‘‘இஞ்ச புள்ள… உன்ற புருசன் விக்கி உயிரோடை இருக்கிறானெண்டு வடிவாத் தெரியுமே…?
சொல்லுறனெண்டுகுறை விளங்கிப்போடாதை… உனக்குச்சந்தேகமெண்டால் விதானையாரிட்டப்பதிஞ்சு மரணசேட்டிபிகேற் எடுத்தியெண்டால் நிறைய உதவியள் கிடைக்கும்…’’

மனம் குலுங்கி வெடித்தது. தலைவிறைக்க… யோசனையில் ஆழ்ந்திருந்தவளுக்கு வாசலில் வந்து நின்றமோட்டார் சயிக்கிள் சத்தம் உசுப்பியது.

யன்னற் திரைச்சீலையை உயர்த்திப்பார்த்தாள். மோட்டார் சயிக்கிளிலிருந்து இறங்கி இரண்டு பெரிய பைகளைத்தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்துகொண்டிருந்தார் அண்ணன் மூர்த்தி. ஓடிப்போய் கதவைத் திறந்தாள்.

‘‘என்னண்ணை இதெல்லாம்…?’’
‘‘இண்டைக்கு மாக்கெற் பக்கம்போனனான்… பிள்ளையளுக்கு கொஞ்சம் சாமான் வாங்கியந்தனான்… எடுத்துஉள்ள வை…’’
‘‘ஏன்ண்ணை… போனமுறை வாங்கினசாமானுகள் இன்னமும் கிடக்கு… அதுக்கிடையில பிறகும்…’’
ஒருவித கூச்சத்தோடுகேட்டாள்…‘‘அதுக்கென்ன…?

விக்கி மச்சான்வாறவரைக்கும் இது என்ர கடமை…நீயோ… பிள்ளையளோ ஒரு குறையும்இருக்கக்கூடாது…
குடிக்கிற தண்ணிகொண்டா…’’

‘‘ஏனண்ணை… கோப்பி போட்டுத்தாறன்… சாப்பிட்டு விட்டியளே…’’
‘‘இன்டைக்கு வெள்ளிக்கிழமை…இனித்தான் சாப்பிடப் போறன்… அண்ணிபாத்துக் கொண்டிருப்ப… வரட்டே..’’

மூன்று ஆயிரம் ரூபாத்தாள்களையும்நீட்டினான்.

‘‘இருக்கட்டுமண்ணை… தேவையெண்டா பிறகு கேட்டு வாங்கிறன்…’’
‘‘பிறத்தியாரிட்ட வாங்கிற மாதிரி ஏன் யோசிக்கிறாய்…? ராத்திரியும் கதைக்கேக்கை வசந்தன் உன்னைக்கேட்டவன்…
அத்தைக்கு ஒரு குறையும் வைக்கக்கூடாது… பிள்ளையளை நல்லாப்படிப்பிக்க வேணுமெண்டு எவ்வளவு சொன்னவன்…?’’

வசந்தன் அண்ணரின் மூத்தவன். அண்ணி உயிருக்குப் போராட்டம் நடத்தித்தான் அவனைப் பெற்றெடுத்தா. பெற்றது மட்டும் தான். வளர்த்ததெல்லாம் மலர்தான். சாப்பாடு தீத்த, கக்கா கழுவ, உடுப்புமாத்த, குளிக்கவாக்க எல்லாவற்றுக்குமேஅவனுக்கு அத்தை வேண்டும். அண்ணனும்அண்ணியும் அறைக்குள் தூங்கிவிட, தூங்காமல் அழுது அடம்பிடிக்கும் வசந்தனை தூக்கித் தோளிற் போட்டுக்கொண்டு, இரவிரவாக முற்றத்தில் உலாத்தி தூங்க வைப்பது மலர்தான். ‘சரியான பிடிச்சிராவி…’ அண்ணிக்கு மனம் விட்டுப் போகும். ஆனால் மலருக்கு சலிக்கவே சலிக்காது. தோளிற் கிடக்கும்போது மெதுவாக நடந்தால் தோளிற் கடிப்பான் வலிக்கும். தாங்கிக் கொள்வாள். காலையிற்கண்ணாடியிற் பார்த்தால் பற்கள் பதிந்துவீங்கியிருக்கும். தடவிப் பார்த்துவிட்டு, ‘உம்மா…’ என்று கொஞ்சிவிட்டுப் போவான்.  அந்த மழலை முழுவதையும் அனுபவித்தவள்அண்ணியல்ல. அவள்தான். முள்ளுக் குத்தினாற்கூட, ‘அம்மா’ என்றுகத்தமாட்டான்.  ‘அத்தே’ என்றுதான்அழுவான். அண்ணியைப் பொறுத்தவரை அவன் உதவாக்கரை. அவன் வளரவளர அண்ணி அவனை அரவணைப்பது குறைந்தது. அவன் மலருடன் ஒட்டிக் கொண்டான். வசந்தனுக்காகவே அவள் அண்ணர் குடும்பத்துடன் இருந்தாள். விக்கியைத் திருமணம் செய்து, மூத்தவள் பிறந்த பிறகுதான் வசந்தன் வெளி நாடு போனான். வெளிநாடு போனபிறகும் அங்கு அண்ணியின் சேகாதரங்களுடன் அவன் ஒட்டவில்லை. ‘அவன்ர காசுதான் இது…’ அவள் காசை வாங்கிக் கொண்டாள்.

‘அப்ப வாறன்… பின்னேரம் மூத்தவள அனுப்பு… வந்து பாடங்கேட்டுப் படிச்சிட்டுவரட்டும்… இனிப் படிப்புத்தான்முக்கியம்…
’‘ஓமண்ணை…’

மூர்த்தியண்ணை மோட்டார்ச்சயிக்கிளை எடுத்துக் கொண்டு போக, அவள் மனம் வெம்பி வெடித்து உடைப்பெடுத்தது. நீண்ட நேரம் அழுதாள். மூர்த்தியண்ணை அவளுக்காகத்துடிப்பார். தம்பி நிசான் ஜெர்மனியில். சம்பிரதாயத்துக்கு ஒருநாள் ரெலிபோன் எடுத்து சுகம் விசாரித்தான. அவ்வளவுதான்.

‘‘ஏனம்மா குட்டி மாமா எஙகளோடைகதைக்கிறேல்ல…?’’

நீங்களெல்லாம் நல்லாப் படிச்சு… வசதியா இருந்தா குட்டி மாமா நெடுக கதைப்பான்…’’ மலர் சொன்னதும், கடைக்குட்டி சுஜி புத்தகத்தை எடுத்துக் கொண்டுவந்து, விரித்து வைத்து எழுத்துக்கூட்டிவாசிக்கும்.

‘‘அம்மா இனி என்னோட குட்டி மாமாகதைப்பாரெல்லே…’’ என்று கேட்கும். இந்த வேடிக்கை விநோதங்களெல்லாம் நெஞ்சைப் பிழியும்.  உயிரை உருக்கும். ஆனாலும், மலர் தாங்கிக் கொள்வாள்.

ஒருநாள் வீட்டுக்கு வந்த உறவினர்ஒருவர்,
‘‘ஏன் பிள்ள விக்கியின்ர படமொண்டு வைக்கேல்லையே…’’
என்றுகேட்டுவிட்டுப் போக தாங்க முடியாமல்அவள்அழுது நைந்தபோது,
‘‘எங்கட அப்பா சாகயில்லையெல்லேயம்மா… அவர் தெரியாமக் கேட்டிட்டார்…’’ என்று ஆறுதல் கூறிற்று சுஜி.

தன் நினைவுகளைக் கலைத்துக்கொண்டு, சுஜியைக் கூட்டி வரப் புறப்பட்டாள். அண்ணன் தந்த காசிலும் ஆயிரம் ரூபாவைபேர்சில் வைத்துக் கொண்டாள். சங்கக்கடைச் சந்தியில்…புதிதாக ஒருநடைபாதைக் கடை ஒன்று முளைத்திருந்தது. முழுக்க முழுக்க சிறுவர்களுக்கானவிளையாட்டுப் பொருட்கள்…‘திரும்பி வரேக்க இந்த வழியாலவந்தால்… சுஜி உதுகளைக் கண்டிட்டு எல்லாம் வேணுமெண்டு கேக்கும்… அண்ணை வாங்கியாந்த ஊருப்பட்ட தின்பண்டங்கள், பிஸ்கற்றுகள், மாப்பேணியள் எல்லாம் வீட்டைக்கிடக்கு…’ என்று நினைத்துக் கொண்டுநடந்தாள். மலர் வாசலுக்குப் போகவும், பாடசாலைவிட்டு பிள்ளைகள் வெளியே வந்துகொண்டிருந்தார்கள்.

சுஜியும் ஒரு சிறுவனை கையிற் பிடித்துஇழுத்து வந்து கொண்டிருந்தது. தாயைக்கண்டவுடன் மகிழ்ச்சி கொப்பளிக்க,

‘‘அம்மா… இதாரெண்டு தெரியுமே…?’’
‘‘இல்ல…’‘‘இது என்ர தம்பி… அம்மா…அப்பா வந்தவுடனை அப்பாட்டச்சொல்லி நாங்களும் இப்பிடி ஒரு தம்பிவேண்டுவமாம்மா…?’’

இந்த இறைஞ்சுதல் அவளை எதுவோ செய்ததுதது. சுஜியை அழைத்துக் கொண்டுவந்தாள். வந்தது வேறு வழி. நடைபாதைக்கடையைத் தவிர்த்து வந்தாள். வரும்வழியில், மரக்கறிக் கடையடியில் அண்ணிநின்றாள்.

‘‘அம்மா… அங்க பெரியத்தையை…’’
சுஜிதான் காட்டினாள். அண்ணி காகாய்கறிக்கு பில் போட்டுக்கொண்டு நின்றாள்.

‘‘அண்ணீ…’’ பக்கத்திற் போனாள்…” ஏனண்ணி…
அண்ணையிட்டச்சொன்னால் வேண்டி வந்து தருவார் தானே… இந்த வெயிலுக்கைநீங்களேன்…’’

அண்ணியின் தலையில் கொத்தாகநரைத்துப் போய்க் கிடக்கும் முடியைப்பார்த்தபடியே கேட்டாள்.

‘‘அவருக்கு இப்ப எங்க எங்கட வீட்டுவேல பாக்க நேரம் கிடக்கு… ஒரே ஊரா வீட்டு வேலையாத்தானே ஓடித்திரியிறார்…’’

வெடுக்கென வந்தது அண்ணியின் பதில். மரக்கறிக்கு பில் எழுதிக் கொண்டிருந்த,  இளைஞன் அண்ணியையும் அவளையும் மாறிமாறிப்பார்த்து விட்டு தலையைக் குனிந்துகொண்டான்.

திடீரென தெருவில் வைத்து தன்ஆடைகளை யாரோ உருவி எடுத்துவிட்டது போல மனம் கூசிப்போனதுமலருக்கு.

‘‘போட்டு வாறன் அண்ணி…’’ சுஜியின் கைவிரல்களைப் பற்றியபடிமலர் நடந்தாள். கண்ணெதிரே அவள்போக வேண்டிய பாதை கரடுமுரடாகத் தெரிந்தது.?