Saturday, June 25, 2022
HomeTamil'உத்தம அன்னையர்கள்' : அன்னையர் தின சிறப்புச் சொற்பொழிவு (Video)

‘உத்தம அன்னையர்கள்’ : அன்னையர் தின சிறப்புச் சொற்பொழிவு (Video)

எமது முன்னோர்கள் அன்னையைத் தெய்வமாகப் போற்றினார்கள். தற்போதும் பலரும் போற்றி வருகிறார்கள். சில அன்னையர்கள் அன்னை என்ற சொல்லுக்கு விதிவிலக்காகச் செயற்படுவதையும் நாம் ஊடகங்கள் மூலம் அறிகிறோம். உலோகங்களெல்லாம் திண்மமானவை தான். பாதரசமும் திரவம் போலவிருக்கும். அதற்காக நாங்கள் எல்லா உலோகத்தையும் திரவமென்று சொல்ல முடியாது. அதேபோன்று தான் அன்னையர்களிலும் சிலர் விதிவிலக்கவிருந்தாலும் அன்னை என்ற சொல்லுக்கு இலக்கணமாகவிருக்கும் அன்னையர்கள் அனைவரும் உத்தம அன்னையர்களாக விளங்குகிறார்கள் என ஈழத்தின் மூத்த இசைச் சொற்பொழிவாளரும், ஓய்வுநிலை அதிபருமான கவிமணி க. ஆனந்தராசா (அன்னைதாஸன்) தெரிவித்துள்ளார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை (10) சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் அன்னையர் தினத்தை முன்னிட்டு எமது செய்திச் சேவைக்கு விசேடமாக வழங்கியுள்ள இசைச் சொற்பொழிவிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகில உலக ரீதியாக காதலர் தினம், நீர் தினம், கைகழுவுவதற்கு ஓர் தினமெனப் பல்வேறு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

எத்தனையோ தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்தாலும் உலகளாவிய ரீதியில் அனுஷ்டிக்கப்படும் அன்னையர் தினம் தனித்துவமானது. அந்த வகையில் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படும் அன்னையர் தினத்தில் அன்னையின் அருமை பெருமைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன்.

அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்
அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்
அறைந்திடல் எளிதாமோ- என்னாலே
அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்

உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்து- இந்த
உதிரத்தைப் பாலாக்கி ஊட்டி வளர்த்து- இந்த
உலகிற்கு ஈந்த உத்தமி ஆகிய
உலகிற்கு ஈந்த உத்தமி ஆகிய
அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்

ஊனம் வந்து உன்னை ஒதுக்கியே வைத்தாலும்
ஊனம் வந்து உன்னை ஒதுக்கியே வைத்தாலும்
வேணுமே என்றே உன்னை விரும்பியே வளர்த்திடும்
உலகினில் கண்கண்ட தெய்வமாய் இருந்தெமக்கு
நல்லறத்தை ஊட்டி நாடு போற்ற வளர்க்கும்
நல்லறத்தை ஊட்டி நாடு போற்ற வளர்க்கும்

அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்
அறைந்திடல் எளிதாமோ- என்னாலே
அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்….

மாய்மாலம் கொட்டும் மனைவி மக்கள் அன்பினிலும்
மாய்மாலம் கொட்டும் மனைவி மக்கள் அன்பினிலும்
தாய் அன்பிற்கு இணையாக
தரணியில் இல்லை ஐயா….
மாய்மாலம் கொட்டும் மனைவி மக்கள் அன்பினிலும்
தாயன்பிக்கு இணையாகத் தரணியில் இல்லை ஐயா!

சேய்களொன்றாய்க் கூடித் தாயினைப் போற்றி நின்றால்
சேய்களொன்றாய்க் கூடித் தாயினைப் போற்றி நின்றால்
மாயாது எம் வம்சம் மண்ணினில் தழைத்தோங்கும்
மாயாது எம் வம்சம் மண்ணினில் தழைத்தோங்கும்

அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்
அறைந்திடல் எளிதாமோ- என்னாலே
அன்னையின் அருமையை அவனியில் எல்லோர்க்கும்…

“ஊனம் வந்து உலகம் தள்ளி ஒதுக்கி விட்ட போதும் வேணுமெந்தன் பிள்ளை என விரும்பி வளர்ப்பவள் தாய்”

அதிகமாக காதலையும், தாயையும் தொடாத கவிஞர்கள் இந்த உலகில் இல்லை எனலாம். ஆனால், தாயை கவிதையாக வடிக்கும் போது அனைத்துக் கவிஞர்களும் ஒரே விதமான கருத்தைத் தான் சொல்லுகிறார்கள். ஆனால், அவரவர்கள் பாணியில்….

எனவே, தாய் என்பவள் இன்று அல்ல… நாளை அல்ல…நேற்று அல்ல…. எந்த வேளைக்கும், எந்தக் காலத்திற்கும் பொருத்தமானதொரு தெய்வீகப் பண்பு நிறைந்தவள் தான் உத்தமியானதொரு தாய் என்பதை ‘tamiltwin’ நேயர்களுடாகப் பகிர்வதில் மிக மகிழ்ச்சியடைகின்றேன். அவ்வாறான உத்தம அன்னையர்களைப் போற்றுகின்ற திருநாளாக மே-10 ஆம் திகதியாகிய இன்றைய தினம் அன்னையர் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.

முதியோரில்லத்திற்குத் தாய், தந்தையர்களை அனுப்பும் துரதிஷ்ட வசமான சம்பவங்கள் எம்மத்தியில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.

நான் அறிந்ததொரு விடயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகின்றேன். தாயானவள் தனது மகன் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காக வெளிநாடொன்றிற்கு அனுப்பியுள்ளா. குறித்த மகன் வெளிநாட்டில் நல்ல வேலை பார்த்து உழைத்துத் தன்னை ஸ்தாபித்துக் கொண்டான். இந்நிலையில் கடைசிக் காலத்தில் தன் தாயை அவளருகிலிருந்து கவனித்துக் கொள்ள முடியாத நிலைக்கு குறித்த மகன் தள்ளபப்பட்டுள்ளான்.

எனினும், தாய் மீது கொண்ட பாசத்தால் மீண்டும் இங்கு வருகை தந்து தாயைப் பராமரிப்பதற்காகத் தனது நெருங்கிய உறவினரொருவரின் கண்காணிப்பில் ஒருவரை நியமித்த்துச் சென்றுள்ளார். எனினும், குறித்த நபர் அவரது தாயை ஒழுங்காக கவனிக்கவில்லை என்பது காலதாமதமாக மகனுக்குத் தெரிய வருகிறது. இதனால், குறித்த தாய் இறுதியாக முதியோரில்லத்தில் சேர்க்கப்படும் நிலை உருவாகிறது.

இப்படித்தான் எத்தனையோ தாய்மார்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் நன்றாக வாழ வேண்டுமென்பதற்காகத் தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி விட்டு இங்கு பெரும் சிரமப்படுகிறார்கள்.

அது மாத்திரமன்றி சில பிள்ளைகள் தமது துணையரின் தூண்டுதலாலும் தம்மைப் பெற்று வளர்த்தெடுத்து ஆளாக்கிய தமது பெற்றோர்களை முதியோரில்லங்களில் சேர்க்கிறார்கள். இவ்வாறான பிள்ளைகள் பிள்ளைகள் என்ற நிலையிலிருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

எனவே, சிலர் செய்கின்ற தவறுகளிற்காக அனைத்துப் பிள்ளைகளையும் குறை சொல்வதைத் தவிர்ப்போம். தங்கள் தாய், தந்தையரைக் கடைசி வரை பக்குவமாகப் பேணிப் பாதுகாக்கும் பிள்ளைகளும் எம்மத்தியில் தானிருக்கிறார்கள் என்பதை மனதிற் கொள்வோம்.

எங்கள் தாய், தந்தையரை முடிந்தவரை நாங்களே பேணிப் பாதுகாப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

{சிறப்புத் தொகுப்பு மற்றும் காணொளி:- செ. ரவிசாந்}

RELATED ARTICLES

Most Popular