fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள்

இழப்பீட்டிற்காக நாங்கள் போராடவில்லை!: யாழில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி கடும் ஆதங்கம்

12 இற்கும் மேற்பட்ட ஆணைக்குழுக்களைக் கூட நாங்கள் சந்தித்துள்ளோம். அந்த ஆணைக்குழுக்களின் விசாரணையில் காணாமல் போன உங்களுடைய உறவுகளுக்காக நாங்கள் ஆடு, மாடு தரலாமெனவும், உங்களுக்கு வாழ்வாதாரமாக என்ன வேண்டுமெனவும் கேட்டார்கள். உண்மையில் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளுக்காக யாருமே விலை பேச முடியாது. இலங்கை அரசாங்கம் எங்களுக்கு வழங்கும் இழப்பீட்டிற்காகவோ அல்லது காணாமல் போனோர் பணியகத்தினால் வழங்கப்படும் மாதாந்தக் கொடுப்பனவுக்காகவோ நாங்கள் போராடவில்லை. எங்கள் போராட்டம் எங்களின் உறவுகளுடன் வாழ்வதற்கான போராட்டம்.

உண்மைக்கும், நீதிக்குமான போராட்டம் என வடகிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத் தலைவி யோகராசா கலாரஞ்சினி கடும் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

“ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனித உரிமை நகர்வும்” எனும் தொனிப் பொருளிலான அரசியல் கருத்தரங்கு நேற்றுப் புதன்கிழமை(06) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கொடூர யுத்தத்திற்கும், தமிழின அழிப்பிற்குமிடையில் எஞ்சிய நாங்கள் மிஞ்சியவர்களைக் கொண்டு போய் இலங்கை இராணுவத்திடமும், இலங்கை அரசாங்கத்திடமும் ஒப்படைத்தோம். இன்று அவர்களை வெளிப்படுத்துவதற்கான நீதியைக் கேட்டு தெருவிலே நின்று கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாகப் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

நாங்கள் பல்வேறு இன்னல்களுக்கும் முகம் கொடுத்த வண்ணம், இராணுவப் புலனாய்வாளர்களின் விசாரணைகளுக்கு உட்பட்ட வண்ணம் காணாமல் ஆக்கப்பட்ட எங்கள் உறவுகளைத் தேடிக் கொண்டிருக்கின்றோம்.

எங்களுடைய தேடுதல் ஊடாக இலங்கை அரசாங்கத்திடம் ஒப்படைத்த உறவுகளை இலங்கை அரசின் அதியுச்ச ஜனாதிபதியைக் கூட நாங்கள் மூன்று தடவைகள் சந்தித்து அவரிடம் எங்கள் கோரிக்கைகளைக் கையளித்தோம். இந்நிலையில் அவர் எங்களுடைய கோரிக்கையை ஏற்றுக் கொண்டு உங்களுடைய பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத் தருவோமென உறுதியளித்தார்.

இலங்கை அரசாங்கம் எங்களுடைய பிரச்சினைக்கு இதுவரை தீர்வு பெற்றுத் தராத காரணத்தால் தான் நாங்கள் சர்வதேசத்திடம் நீதி கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசால் தர முடியாததை சர்வதேசத்திடமாவது கேட்டு சர்வதேசத்தின் ஊடாக அரசாங்கத்துக்கு அழுத்தத்தைக் கேட்டு எங்களுக்கான நீதியை, எங்கள் உறவுகளுக்கான விடுதலையைப் பெற்றுக் கொள்ளலாமென்ற நம்பிக்கையுடனும், ஏக்கத்துடனும் காத்திருக்கின்றோம். சர்வதேச நீதியை நாங்கள் பெற்றுக் கொள்வதற்கு எமது மாணவ சமூதாயம் முன்வர வேண்டும்.

பத்துமாதம் சுமந்து பெற்றெடுத்த எங்களுடைய பிள்ளைகளுக்காகவும், எங்களுடைய உறவுகளுக்காகவும், எங்களுடைய சகோதரிகளின் கணவன்மார்களுக்காகவும், ஏனைய உறவுகளுக்காகவுமே நாங்கள் போராடுகின்றோம். இதனை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

உயர்தரப் பரீட்சை முடிவுகள்: வெளியான அறிவிப்பு!

N N

வேகத்தால் பளையில் சற்றுமுன் கோர விபத்து: இரு இளைஞர்கள் ஆபத்தான நிலையில்…. (Video, Photos)

TamilTwin

ஏனைய கட்சி உறுப்பினர்களை ஓரங்கட்டும் கூட்டமைப்பு: நல்லூர் பிரதேச சபையில் காரசார விவாதம் (Video, Photos)

TamilTwin