fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Father Sakthivel
இலங்கைச் செய்திகள்

ஆட்சியாளர்கள் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட வேண்டும்: அருட்தந்தை சக்திவேல் வலியுறுத்தல்

அரசியல் கைதிகளினுடைய பிரச்சினை என்பது மனிதவுரிமை சார்ந்தது மட்டுமல்ல…அரசியல் சார்ந்த பிரச்சினை. இந்த அரசியல் சார்ந்த பிரச்சினையை சரியாக அணுக வேண்டுமானால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சியாளர்கள் முற்படுத்தப்பட வேண்டுமென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் தலைவர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்துள்ளார்.

“ஜெனீவாவும் ஈழத்தமிழரின் மனித உரிமை நகர்வும்” எனும் தலைப்பிலான கருத்தரங்கு இன்று புதன்கிழமை(06) பிற்பகல் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

கடந்த-2018 ஏப்ரல் மதம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கெதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானமொன்று கொண்டு வரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்திற்குத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ரணிலுக்கு ஆதரவு வழங்குவதற்காகப் பத்துக் கோரிக்கைகளை முன்வைத்தது. அதில் ஒரு கோரிக்கை அரசியல் கைதிகளின் விடயம் தொடர்பாக அமைந்திருந்தது.

கடந்த வருடம் யூலை மாதம் அப்போது எதிர்க்கட்சித் தலைவராகவிருந்த சம்பந்தனைச் சந்திக்கச் சென்ற போது வெளிநாட்டுக்குச் சென்றுள்ள ஜனாதிபதி இன்னும் இரண்டு கிழமைகளில் வந்து விடுவார். நாங்கள் அவருடன் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பில் உரையாடவுள்ளோம் எனக் கூறினார். ஆனால், எத்தகைய முன்நகர்வுகளும் இடம்பெறவில்லை என்பதே உண்மை.

கடந்த ஒக்ரோபர் மாதம் நடைபெற்ற அரசியல் சதி நடவடிக்கையின் போது கூட அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரம் ஒரு கட்டத்தில் உச்ச நிலையை அடைந்தது. இவ்வாறான நிலையில் தான் மகிந்த ராஜபக்சவின் மகன் நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்கிறார். இதற்கென நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன், காதர் மஸ்தான், வியாழேந்திரன் ஆகியோரை உள்ளடக்கிய உப குழுவொன்றும் அமைக்கப்படுகிறது. இவர்கள் அனைவரும் எங்களால் ஒதுக்கப்பட்டவர்கள்.

இவ்வாறானவர்களைத் தான் அரசியல் கைதிகளை சந்திப்பதற்காக அனுப்புகின்றார்கள்.அரசியற் கைதிகள் அவர்கள் எங்களுக்குச் செய்தி அனுப்புகிறார்கள். மகிந்த ராஜபக்சவுக்கு சம்பந்தன் ஆதரவளிக்க வேண்டுமென்பதே அந்தச் செய்தி. அதற்குப் பதிலாக நானுப்பிய செய்தியில் நாமல் ராஜபக்சவை என்னுடன் கதைக்குமாறு தெரிவித்திருந்தேன். ஆனால், அதற்கு எந்தவிதமான பதிலும் கிடைக்கவில்லை.

கடந்த தீபாவளி தினத்தன்று அலரி மாளிகையில் நடந்த தீபாவளிப் பண்டிகையின் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான மானியங்களை நாங்கள் தேடிக் கொண்டிருக்கின்றோம், சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இதுதொடர்பாக கதைத்துக் கொண்டிருக்கின்றோம் எனத் தற்போதைய ஜனாதிபதி கூறினார். ஆனால், கடந்த டிசம்பர் மாதம் ரணில் விக்கிரமசிங்கவிற்கு மீண்டும் பிரதமர் பதவியைக் கையளிக்கும் போது அரசியல் கைதிகளை விடுதலை செய்ய மாட்டோம் எனக் கூறினார்.

ஆகவே, தங்களுடைய அரசியல் நலன்களுக்காகவே இவ்வாறெல்லாம் எங்கள் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாளுகிறார்கள். தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக் கூடத் தங்களுடைய அரசியலுக்காகத் தான் அரசியல் கைதிகள் விவகாரத்தைக் கையாள நினைக்கின்றார்கள். இதன்காரணமாக எங்களால் தூரமாக்கப்பட்ட நிலையில் தான் இவர்கள் தற்போது தங்கள் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

போர்க் குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டிற்காக மகிந்த, மைத்திரி மட்டுமல்ல ஐ. நாவும் தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும்.

அதுமட்டுமல்ல இலங்கையில் நடந்த யுத்தத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து நாடுகளும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். அதேபோன்று இந்தியாவும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். இவர்கள் அனைவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கு ஐ. நா ஆயத்தமாகவிருக்கின்றதா? என இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கேள்வியெழுப்ப விரும்புகின்றேன்.

தங்களுடைய குற்றங்களை மறைப்பதற்காக இன்னும் இரண்டு வருட கால அவகாசத்தைக் கொடுத்திருக்கிறார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய சாட்சிகள் தற்போது ஒவ்வொருவராக இறந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான சாட்சிகள் மறைய வேண்டுமென்பது தான் ஐ. நாவின் தேவையாகவுள்ளதா? இதுதான் மனிதவுரிமையா?

எமக்கான பாதுகாப்பு என்பது சுயநிர்ணய உரிமை ஊடான எமது பிரதேசத்தை நாமே ஆளுகின்றதொரு ஆட்சி முறை. இதன் மூலமே எங்களுடைய பாதுகாப்பு சாத்தியப்படும். மிகப் பெரிய இன அழிப்பிற்கு நாங்கள் முகம் கொடுத்துள்ளமையால் இதனைப் பெற்றுக் கொள்வதற்கான முழு உரிமையும் எங்களுக்கிருக்கிறது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெளிநாட்டு சக்திகளே பிரச்சனைகளை உருவாக்குகின்றனர்: நாமல் குற்றச்சாட்டு

World News

யாழில் நாளை மின்தடைப்படவுள்ள பகுதிகள் விபரம் இதோ….

TamilTwin

சூறாவளி அபாயம்!- மீனவர்களுக்கு எச்சரிக்கை

World News